“மாநில அரசுகளை கவிழ்க்க பாஜக ரூ.6,300 கோடி செலவு செய்துள்ளது” - அதிர்ச்சி கிளப்பும் அர்விந்த் கேஜ்ரிவால்

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால்தி இந்து

மாநில அரசுகளை கவிழ்ப்பதற்காக மத்திய அரசு ரூ.6,300 கோடி செலவிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுதான் நாட்டின் பணவீக்கத்துக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்ட பின்னர் ஆம் ஆத்மி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அர்விந்த் கேஜ்ரிவால் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் இன்று அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தயிர், மோர், தேன், கோதுமை, அரிசி போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 7500 ரூபாய் கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் அரசுகளை கவிழ்ப்பதற்காக இதுவரை மத்திய அரசின் சார்பில் ரூ.6,300 கோடி செலவு செய்துள்ளனர். மாநில அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால், கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டியதில்லை. மக்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், “நாட்டில் இப்போது வரை கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசம், பீகார், அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா போன்ற பல மாநில அரசுகளை கவிழ்த்துள்ளனர். ஒரு தொடர் கொலைகாரன் இருக்கிறான். மக்கள் ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்கிறார்கள், இவர்கள் அதை கவிழ்க்கிறார்கள். மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டியால் கிடைத்த பணத்தை எம்.எல்.ஏக்களை வாங்க பயன் படுத்துகிறார்கள். இதுவரை 227 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளனர். எங்கள் கட்சி எம்.எல்.ஏ யாரும் விலகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரும்” என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in