கீழடி அகழாய்வு: 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிடுக!

மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
கீழடி
கீழடி

கீழடி அகழாய்வின் 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட வேண்டும், 8-வது கட்ட அகழாய்வையும் உடனே ஆரம்பிக்க வேண்டும் என்று பாமக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்கள் என்ற வகையில் நம் அனைவருக்கும் உலக அளவில் பெருமை தேடித் தந்தவை கீழடியில் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகள்தான். அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் முடிவுகளைப் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது.

அதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களின்படி, தமிழர் நாகரிகத்தின் தொன்மை 2300 ஆண்டுகளாக இருக்கும் என்று நம்பப்பட்டு வந்த நிலையில், கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 4-ம் கட்ட ஆய்வின் மூலம்தான் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது. அதன்பின் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த நெல் மணிகளின் மூலம், தமிழர் நாகரிகம் 3200 ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கலாம் என்று தெரியவந்திருக்கிறது.

இதுவரை மெய்ப்பிக்கப்பட்டுள்ள காலத்தைவிடவும் தமிழர்கள் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பது தமிழர்களாகிய நமக்குத் தெரியும். ஆனால், அதை உலக அரங்கில் மெய்ப்பிக்க தொல்லியல் சான்றுகள் தேவை. அதற்காகத் தான் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றின் முடிவுகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதம் நியாயமற்றது; அது தமிழர் நாகரிகத்தின் தொன்மையை நிரூபிக்க தடையாகவுள்ளது.

கீழடியில் முதல் 3 கட்ட அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மேற்கொண்டது. இந்தப் பணிகளை தலைமையேற்று நடத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பாதியிலேயே இடமாற்றம் செய்யப்பட்டதால், அகழாய்வு அறிக்கை தயாரிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அகழாய்வுப் பணிகளும் 3 கட்டங்களுடன் நிறுத்தப்பட்டன. அதன்பின் அடுத்த 4 கட்ட ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் ஆராய்ச்சித் துறை தான் மேற்கொண்டது.

கீழடியில் 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகளின் முடிவுகள் 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அந்த ஆய்வின் அறிக்கையை தயாரித்து வெளியிடுவதற்கு அதிகபட்சமாக ஓராண்டு தான் தேவைப்பட்டது. அந்தக் கால அளவீட்டை வைத்துப் பார்த்தால் 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 5 மற்றும் 6-ம் கட்ட அகழாய்வு முடிவுகளை எப்போதோ வெளியிட்டிருக்கலாம். ஆனால், கரோனா நோய்ப்பரவல் உள்ளிட்ட காரணங்களை காட்டி, கீழடி அகழாய்வு அறிக்கைகளை தயாரித்து வெளியிடுவது தாமதமாகி வருகிறது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

கீழடி அகழாராய்ச்சி அறிக்கைகளை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் செய்வதன் நோக்கத்தையாவது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு தாமதம் செய்வதற்கான காரணம்தான் புரியவில்லை.

உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களின் ஒற்றை எதிர்பார்ப்பு கீழடி அகழாய்வு அறிக்கைகள் அனைத்தையும் வெளியிட்டு, தமிழர் நாகரிகத்தின் தொன்மை எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதுதான். இதில் செய்யப்படும் எந்த தாமதத்தையும் அனுமதிக்க முடியாது. எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, கீழடி 5, 6 மற்றும் 7-ம் கட்ட அகழாய்வு அறிக்கைகளை உடனடியாகத் தயாரித்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மற்றொருபுறம், வட மாநிலங்களில் பணி செய்வதற்காக அனுப்பப்பட்ட மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதமே தமிழகத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். அவருடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டு, முதல் 3 கட்ட தொல்லியல் அகழாய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கீழடியில் 8-வது கட்ட அகழாய்வை விரைவில் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in