கவிதாவிடம் 9 மணிநேரம் விசாரணை நிறைவு: மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

கவிதா
கவிதாகவிதாவிடம் 9 மணிநேரம் விசாரணை நிறைவு: மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் பாரத் ராஷ்டிர சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதாவிடம் அமலாக்கத்துறை இன்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவருக்கு மார்ச் 16ம் தேதி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே அமலாக்கத்துறையின் காவலில் உள்ளார். டெல்லியின் புதிய மதுபானக் கொள்கையை வடிவமைத்ததில் ஊழல் செய்ததாகக் கூறி சிபிஐ அவரை பிப்ரவரி 26ல் கைது செய்தது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கின் விசாரணையில், இடைத்தரகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வலையமைப்பை மையப்படுத்திய அமைப்பை "சவுத் குரூப்" என்று சிபிஐ அழைக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மதுபானக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. "சவுத் குரூப்" நபர்களில் ஒருவராக கவிதாவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாகப் பேசிய கவிதா, "இந்தியாவில், அமலாக்கத் துறை சம்மனுக்கும், நரேந்திர மோடியின் சம்மனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இப்போது எங்கு தேர்தல் வந்தாலும், பிரதமருக்கு முன், அமலாக்கத்துறை வருவதே தற்போது நடைமுறையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் என்ன செய்ய முடியும்? மக்கள் நீதிமன்றத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்துக்கோ செல்ல முடியும். தெலங்கானாவில் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் எங்கள் தலைவரை மிரட்டவே இத்தகைய நடவடிக்கைகள் " என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in