தெலங்கானா முதல்வரைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ்: மூன்றாவது அணிக்கான முயற்சியா?

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ்: மூன்றாவது அணிக்கான முயற்சியா?

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தனி விமானத்தில் பல்வேறு மாநிலங்களுக்குப் பறந்து சென்று மூன்றாவது அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ். எனினும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஹைதராபாத் சென்று சந்திரசேகர் ராவைச் சந்தித்துப் பேசியிருப்பது, 2024 மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளை அணிதிரட்டி மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியா எனும் ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

பிஹார் முன்னாள் அமைச்சர் அப்துல் பாரி சித்திக், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சுனில் சிங், போலா யாதவ் ஆகியோருடன் நேற்று (ஜன.11) ஹைதராபாத் சென்றடைந்த தேஜஸ்வி யாதவ், அங்கு சந்திரசேகர் ராவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ், உறவினர் ஜோகினப்பள்ளி சந்தோஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தேஜஸ்வி யாதவின் தந்தையும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவை போனில் அழைத்து நலம் விசாரித்த சந்திரசேகர் ராவ், மீண்டும் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்றும், தேசிய அரசியலில் முக்கியப் பணியாற்ற வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டார். லாலு பிரசாதின் நீண்டகால அரசியல் அனுபவம், புதிய அணிக்கு வலு சேர்க்கும் எனும் கருத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து ‘பாஜக அல்லாத இந்தியா’வை உருவாக்கும் முயற்சிகள் ஈடுபட்டிருப்பதற்காக வாழ்த்துவதாக, சந்திரசேகர் ராவிடம் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் உருவாவதற்குத் தான் ஆதரவளித்தது குறித்தும் சந்திரசேகர் ராவிடம் அவர் நினைவுகூர்ந்தார்.

ஹைதராபாதில் நடந்த இடதுசாரிகள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இதற்கிடையே, தேஜஸ்வி யாதவின் தெலங்கானா பயணம் பிஹாரில் கடும் எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக போன்ற கட்சிகள் தேஜஸ்வி யாதவைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. “பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்குச் சேவை செய்யாமல் பிஹாருக்கு வெளியில் சுற்றித் திரிவது ஏன்? பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியம் சேர்வதால் எந்த மதிப்பும் வந்துவிடப்போவதில்லை” என ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் ஜா கிண்டலடித்திருக்கிறார். அதேபோல, “பிஹாரிலேயே கூட்டணியைத் தொடர முடியவில்லை. இவ்வளவு ஏன், தனது அண்ணனுடனேயே இணக்கமாகச் செல்ல முடியவில்லை. நீங்கள் எப்படி மக்களவைத் தேர்தலுக்காகக் கூட்டணியை உருவாக்குவீர்கள்?” என பாஜகவினரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

கடந்த மாதம் குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ், சென்னை சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

அப்போதும் மூன்றாவது அணிக்கான முயற்சிகள் நடக்கின்றனவா எனும் பேச்சுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in