சர்ச்சையான ரஜினி, ஆளுநர் சந்திப்பு: பாஜக, கம்யூனிஸ்ட் கருத்து மோதல்

சர்ச்சையான ரஜினி, ஆளுநர் சந்திப்பு: பாஜக, கம்யூனிஸ்ட் கருத்து மோதல்

தமிழக ஆளுநரைச் சந்தித்த நடிகர் ரஜினி, ஆளுநருடன் அரசியல் பேசியதாகவும், அது குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரித்திருந்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘ஆளுநருடன் பேசிய அரசியல் குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. அரசியல் பேசுவதற்கு ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல.’ என அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ”திமுகவின் ‘பி’ டீமாக இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் திமுக கொடுக்கக் கூடிய ஆக்ஸிஜனில் உயிர்வாழும் சில கட்சித் தலைவர்கள் தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டுவதற்காக ரஜினியை விமர்சித்திருக்கிறார்கள். ரஜினி சொன்னதிலே என்ன தவறு இருக்கிறது?. அவர்களுக்குள் இந்திய அரசியல், உலக அரசியலைப் பற்றி விவாதித்திருப்பார்கள். அரசியல் இல்லாத வாழ்க்கையைக் காட்ட முடியுமா? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போலத் தவறு செய்தவர்கள் பயந்து கொண்டே இருக்கிறார்கள் ” என்றார்.

இதற்குப் பதிலடி கொடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ரஜினி, ஆளுநர் சந்திப்பு குறித்து எங்களின் கேள்விக்கு ஆளுநர் அலுவலகம் பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக் கொட்டையைப் போல் முந்திக் கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தி தொடர்பாளரோ அல்ல. அப்படியிருக்கும் போது வரிந்துகட்டிக் கொண்டு அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல உள்ளது. ஆளுநர் அவரின் எல்லையைத் தாண்டி ஆர்எஸ்எஸ் அமைப்பினுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மேடைகளில் பிரசாரம் செய்து வருகிறார். அவரின் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கெனவே கடும் விமர்சனத்தைத் தமிழகத்திலேயே உருவாக்கியுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் 'பி' டீமாக இருந்ததில்லை. ஆனால், ஆர்எஸ்எஸ் தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு ‘பி’ டீமாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் ‘பி’ டீமாக செயல்படுவதற்காக மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மக்கள் செல்வாக்கைப் பெறமுடியாமல் புறக்கடை வழியாக ஆளுநர் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் பாஜகவின் எண்ணம் பகல் கனவாகவே முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in