காவல் நிலையத்தில் காவடிகட்டு நிகழ்விற்குத் தடை: இந்து அமைப்பினர் போராட்டத்தால் குமரியில் பரபரப்பு

காவல் நிலையம் முன்பு அதிகாலையில் குவிந்த இந்து அமைப்பினர்
காவல் நிலையம் முன்பு அதிகாலையில் குவிந்த இந்து அமைப்பினர்

குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வேளிமலை குமாரசாமி கோயில் காவடி நிகழ்வு இன்று நடக்கிறது. இந்நிகழ்விற்கு போலீஸாரும் விரதம் இருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கம். இன்று காவல் நிலையத்தில் வைத்து காவடி எடுக்கும் நிகழ்விற்கு தடைபோட்டதாக சர்ச்சை வெடிக்க இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

அலங்கார தோரணையுடன் தக்கலை காவல் நிலையம்
அலங்கார தோரணையுடன் தக்கலை காவல் நிலையம்

கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமாரசாமி கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. வள்ளித் திருமணம் இங்குதான் நடைபெற்றதாக ஐதீகம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுப்பது வழக்கம். அதில் குற்றங்கள் குறைய வேண்டும் என காவல் துறையினரும், நீர் பாசனம் செழித்து விவசாயம் செழிக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினரும் காவடி எடுப்பது வழக்கம். இந்த நடைமுறை குமரி மாவட்டம், கேரளத்தோடு இருந்த காலத்தில் இருந்தே பின்பற்றப்படுகிறது.

வழக்கமாகவே காவல் நிலையம், பொதுப்பணித்துறையில் அலுவலர்கள் காவடி எடுத்துச் செல்லும் வகையில் காவல் நிலையம் அலங்காரம் செய்யப்பட்டு வெகுவிமர்சையாகக் காணப்படும்.இந்நிலையில் குமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் காவல்நிலையத்தில் இருந்து போலீஸார் காவடி எடுத்துச் செல்லும் பாரம்பரிய நிகழ்வுக்கு தடை விதித்திருப்பதாகத் தகவல் கசிந்தது. இதனால் தக்கலை காவல் நிலையம் முன்பு இன்று அதிகாலையிலேயே குவிந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் நிலையத்தில் வைத்து காவடி கட்டும் நிகழ்வு காலம், காலமாக நடந்துவருகிறது. ஆனால், இந்த முறை விரும்பும் காவலர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு காவடி கட்டலாம் என கூறியிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இந்து அமைப்புகளின் போராட்டத்திற்குப் பின்பு காவல் நிலையத்தில் காவடிகட்ட அனுமதிக்கப்பட்டு காவடி கட்டு தொடங்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in