சுபமுகூர்த்த நாள், நல்ல நேரம் பார்த்து பதவி ஏற்பு: உதயநிதியை விளாசும் நடிகை கஸ்தூரி

சுபமுகூர்த்த நாள், நல்ல நேரம் பார்த்து பதவி ஏற்பு: உதயநிதியை விளாசும் நடிகை கஸ்தூரி

உதயநிதி ஸ்டாலின் நல்ல முகூர்த்த நாள், நல்ல நேரம் பார்த்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாக நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நாளை பதவி  ஏற்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ஆளுநர் மாளிகையின் தர்பால் ஹாலில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோட்டையில் உதயநிதிக்கான தனியறையை தயார் செய்யும் பணிகள் முடிவுற்றுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பேற்பதாகச் சொல்லப்படும் நிலையில் சிறப்புத் திட்டச் செயலாக்க துறையும் உதயநிதியைச் சேர இருக்கின்றன. திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்த பேச்சுக்கள் எழுந்தன. இந்த நிலையில் வெளியான திமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களையும் கொண்டு வந்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி ஒன்றில், " எனது குடும்பத்தில் உள்ள மகனோ, மருமகனோ என யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள்ளாக தற்போது அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்க உள்ளார். உதயநிதி அமைச்சராவதையொட்டி அவரின் அம்மா துர்கா ஸ்டாலின் திருவொற்றியூர் கோயிலில் சிறப்புப் பூஜை செய்து வந்துள்ளார். இதையடுத்து திமுகவில் வாரிசு அரசியல் தொடர்வதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நாளை நடைபெறும் பதவி ஏற்பு குறித்து பல்வேறு தரப்பினரும் வேறுவிதமான விமர்சனங்களையும் வைக்கத் தொடங்கியுள்ளனர். அதாவது நாளை சுபமுகூர்த்தம் என்பதாலும், காலை 9.15 முதல் 10.15 வரை நல்ல நேரம் என்பதாலும் பஞ்சாங்கம் பார்த்து நாள், நேரம் குறிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.  நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில், 'டிசம்பர் 14-ம் தேதி சுபமுகூர்த்த நாள். காலை 9.30 மணி மிகச் சிறந்த மங்களகரமான நேரம். அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் எல்லாம் பார்த்துத் தொடங்குவதே பகுத்தறிவு' என விமர்சனம் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in