'அவரைக் கண்டா வரச் சொல்லுங்க':ஜோதிமணி எம்.பிக்கு எதிராக கரூர் முழுவதும் பரபரப்பு போஸ்டர்

'அவரைக் கண்டா வரச் சொல்லுங்க':ஜோதிமணி எம்.பிக்கு எதிராக கரூர் முழுவதும் பரபரப்பு போஸ்டர்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை காணவில்லை என்று தொகுதியிலும்,  சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான ஜோதிமணி  ராகுல்காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராகவும், நெருக்கமானவராகவும்  அறியப்படுபவர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அவர் பணியாற்றிய காலம் தொட்டு அவரது சிறப்பான செயல்பாடுகளால் மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.  அதன் விளைவாகவே காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டம் வரை செல்வாக்கு பெற்றவர். 

நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு கரூர் அரசியலில் அதிக கவனத்தை செலுத்தி வந்த ஜோதிமணி, தற்போது கட்சியின் மேல்மட்ட அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே கரூர் மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல் ஏற்பட்டதால் கரூர் அரசியலில் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறார். அமைச்சர் மட்டும் இல்லாமல், மாவட்ட ஆட்சியருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தொகுதிக்குள் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளையும் ஜோதிமணி புறக்கணித்து வருகிறார். 

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின்  இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஜோதி மணியின் பங்கு மிக முக்கியமானது. தென் மாநிலங்களில் அவரது பயணத்தையும்,  அவர் சந்திக்க வேண்டிய நபர்களையும் கிட்டத்தட்ட இவரே இறுதி செய்கிறார். அதனால் யாத்திரையின் பெரும் பகுதி அவர் ராகுல்காந்தியுடனேயே  இருக்கிறார். அதனால் அவரை அண்மைக்காலமாக கரூருக்குள் அதிகம் காண முடியவில்லை.

இதனைக் கரூர் மாவட்டத்தில் அவருக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் உள்ளவர்கள் இப்போது  சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கரூர் எம்.பி.யை காணவில்லை என்று சுவரொட்டிகள் அடித்து  கரூர் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி  இந்த போஸ்டர் டிசைனை  சமூக வலைதளங்களிலும் வேகமாக பரப்பி  வருகின்றனர். காணவில்லை என்பது மட்டுமல்லாமல் அவரை ஏகத்துக்கும் கிண்டலடித்துள்ளனர்.

ஜோதிமணிக்கு  மிகவும் பிடித்த இடங்களாக போலீஸ் வேன், பார்லிமெண்ட் கேண்டீன் ஆகியவையாகவும்,  வெளிநடப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவது கலெக்டர் அலுவலகத்தில் படுத்து உறங்குவது, காளான் பிரியாணி சமைப்பது அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்றும்,   தொகுதி நலன், மக்கள் வாக்குறுதி  ஆகியவை பிடிக்காத வார்த்தைகள் என்றும், மே 23-ம் தேதி முதல் அவரை காணவில்லை,  அவரைக் கண்டா வரச் சொல்லுங்கள் என்றும் அந்த போஸ்டர் கிண்டலடித்துள்ளது.

இது கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in