எதைக் கொடுத்தாலும் மக்களின் முடிவு மாறாது!

இடைத் தேர்தல் ‘கவனிப்பு’கள் குறித்து ஜோதிமணி பதில்
ஜோதிமணி
ஜோதிமணி இடைத் தேர்தல் என்றால் இப்படித்தான் இருக்கும்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் நடந்தேறிய கூத்துகள் பொதுவெளியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மு.க.அழகிரி அறிமுகப்படுத்திய திமுகவின் திருமங்கலம் ஃபார்முலா தான் முன்பெல்லாம் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால், தற்போது ஈரோடு களத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி ஃபார்முலா அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.

ஈரோடு கிழக்கின் வாக்காளர்கள் தினம் தினம் வரும்படியில் மஞ்சக் குளித்தார்கள். ஒரு வாக்காளருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை போய்ச் சேர்ந்திருப்பதாக ஒரு வாரம் முன்னதாகவே சொன்னார்கள். அப்படியும் திருப்தி இல்லாததால் தினமும் ஒரு டூர், பிரியாணி விருந்து என்றும் வாக்காளர்களை அள்ளிக்கொண்டுபோய் அசத்தினார்கள். வீட்டுக்கு வீடு பட்டுப்புடவை, குக்கர் என சீர்வரிசை கணக்காய் பொருட்களும் வரிசைகட்டின. ஆளும் கட்சியின் ’கவனிப்பு’களை சமாளிக்க முடியாமல் திணறிய ஆண்ட கட்சியும் தங்களால் முடிந்த பரிசுகளை வாரி வழங்கியது. 

அமைச்சர் மஸ்தான்
அமைச்சர் மஸ்தான்தோசை சுட்டு வாக்குச் சேகரிப்பு...

இதற்கெல்லாம் காரணம், இந்த இடைத் தேர்தலை இரண்டு தரப்பும் மானப் பிரச்சினையாகப் பார்ப்பதுதான். கட்சி, சின்னம் இரண்டும் தன்னிடம் வந்திருப்பதால் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிட வேண்டும் என ஈபிஎஸ் நினைக்கிறார். அண்மைக்காலமாக, இடைத் தேர்தலை தங்கள் ஆட்சிக்கான மதிப்பீடாக ஆளும் கட்சிகள் பார்க்கின்றன. அதனால், என்ன விலை கொடுத்தாவது வெற்றியை தக்கவைக்க வேண்டும் என துடிக்கிறது ஆளும் திமுக. அதற்காகத்தான், ஈரோடு கிழக்கில் கூட்டணித் தோழனான காங்கிரஸுக்காக வாரி இறைத்திருக்கிறது திமுக.  

“தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம்” என்று பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின், அதைச் சொல்லியே வெற்றிக் கனியை சுவைக்க நினைக்கலாம். அதைவிடுத்து, ஒட்டுமொத்த திமுகவையே ஒரு தொகுதிக்குள் இறக்கிவிட்டு இடைத் தேர்தல் களத்தை திருவிழாக் களமாக்கிவிட்டார் ஸ்டானின். வேட்பாளரை நிறுத்தி இருக்கும் காங்கிரஸுக்கு இங்கே எந்த வேலையும் வைக்காமல் திமுகவினர் தாங்களே அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துமுடித்துவிட்டனர். இனி அவர்களுக்குத் தெரியவேண்டியது, எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயித்தார் என்பது மட்டும் தான்.

ஈவிகேஎஸ் - கமல் சந்திப்பு
ஈவிகேஎஸ் - கமல் சந்திப்பு

இப்படியான சூழலில், ஈரோடு கிழக்கில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த காங்கிரஸ் எம்பி-யான கரூர் ஜோதிமணியிடன் பேசினோம். இனி அவரது பேட்டி...  

ஈரோடு கிழக்கு தேர்தல் களம் எப்படி இருக்கிறது? 

மிகச் சிறப்பாக இருக்கிறது. எங்கள் வேட்பாளர் பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர். தனக்கென தனிப்பட்ட அடையாளத்தை பெற்று விளங்குபவர். கூட்டணி பலமும் இருக்கிறது. திமுகவின் கடுமையான களப்பணி நடக்கிறது. அதனால் மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில்  வெற்றிபெறுவோம். 

இப்படியான நம்பிக்கை இருக்கையில் அதை நம்பாமல் ஓட்டுக்கு பணம் மாதிரியான முறைகேடான செயல்களில் திமுகவினர் ஈடுபட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?  

திமுகவினர் தேர்தலை சந்திப்பதில் எப்போதுமே தீவிரமாக ஈடுபடக் கூடியவர்கள் தான்.  அதை  நானே கடந்த மக்களவைத் தேர்தலின்போது பார்த்திருக்கிறேன்.  பேரவைத் தேர்தலிலும் அவர்களுடைய களப்பணியை பார்த்து வியந்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கிற முதல் இடைத்தேர்தல் இது.  அதனால் தங்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மிக தீவிரமாகச் செயல்பட்டார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது?

ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோட்டில் இருந்தால் அரசு நிர்வாகம் என்ன ஆகும்?                     

அவர்கள்  அமைச்சர்கள் மட்டுமல்ல...  திமுக மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் அவர்கள், கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று இங்கு வந்து பணியாற்றினார்கள். அதேசமயம் அரசுப் பணிகளையும் தொய்வில்லாமல் செய்துகொண்டு தான் இருந்தார்கள். 

இந்தியாவின் பிரதம மந்திரி 365 நாட்களுமே எலெக் ஷன் மோடில் தான் இருக்கிறார்.  நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் யோசிப்பதே இல்லை. இப்போது கூட டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஒட்டுமொத்த தலைவர்களையும் களமிறக்கி பாஜக வேலை செய்தது. அதையெல்லாம் நீங்கள் கேள்வி கேட்பதில்லை. தமிழகத்தில் ஜனநாயக ரீதியில் தேர்தல் பணியாற்றுவதைத் தான் விமர்சிக்கிறீர்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாகச் சொல்லும் திமுக, அதைச் சொல்லியே வாக்குச் சேகரித்திருக்கலாமே... எதற்காக ஓட்டுக்குப் பணம் என்ற உத்தியைக் கையில் எடுக்க வேண்டும்? 

தென்னரசு
தென்னரசுஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர்...

இதை நீங்கள் ஏன் எதிர்மறையாக பார்க்கிறீர்கள். மக்களுக்கு நன்மை செய்திருக்கிறோம் அவர்கள் நமக்கு வாக்களித்து  விடுவார்கள் என்ற நம்பிக்கை ஆளும் கட்சிக்கு இருக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டமும் இன்னும் ஐந்து மாதத்தில் தொடங்கப்படும் என்று சொல்லிவிட்டார்கள்.

இத்தனையும் செய்திருந்தாலும், சொல்லி இருந்தாலும் கோட்டையில் உட்கார்ந்துகொண்டு அதிகாரமாக கேட்காமல், நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கிறது திமுக. மூத்த அமைச்சர்கள்  கூட உடல் வருத்தம் பாராது களமிறங்கி பணியாற்றுவது என்பது எவ்வளவு ஆரோக்கியமான,  ஜனநாயகமான விஷயம். 

தென்னரசு
தென்னரசுவாக்குச் சேகரிப்பில்...

வாக்காளர்களுக்கு சுற்றுலா, பட்டுப்புடவை,  குக்கர், பணம் எல்லாம் தருவதும் ஜனநாயகம் என்கிறீர்களா?   

இதெல்லாமே குற்றச்சாட்டுகள் தான்;  உண்மை அல்ல.  இது எப்போதும் உள்ளதுதான். எந்த இடைத் தேர்தல் நடந்தாலும், ஆளும் கட்சியினர் இதைக் கொடுத்தார்கள்,  அதைக் கொடுத்தார்கள் என்று குற்றம்சாட்டுவது வாடிக்கைதான். ஆனால் களத்தில் சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.  ஒவ்வொரு அமைச்சரும் எம்எல்ஏ-வும் நடந்தே வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்கள். வயதில் மூத்த அமைச்சர்களும் இதில் அடக்கம்.  

ஏன், ஓடி ஓடிப்போய் வாக்குச் சேகரித்தார்கள் என்று கூட சொல்லலாமே? 

ஒரு அமைச்சராக இருக்கிறவர் சுறுசுறுப்பாக இருப்பதை ஏன்  விமர்சனம் செய்கிறீர்கள். அவர் ஆரோக்கியமாக இருக்கிறார், அதனால் ஓடிப்போய் வாக்குச் சேகரித்தார்.  உங்களால் முடிந்தால் நீங்கள் ஓடிப் போய் அல்லது ஆடிப்போய் வாக்குச் சேகரித்திருக்கலாமே;  யார் வேண்டாம் என்றார்கள்?

மத்தியில் ஆளும் பிரதான கட்சியான பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கிறது. ஆனால்,  பாஜக தலைவர்களின் படம் எங்கும் காணப்படவில்லை.  பாஜக  மாநிலத் தலைவர் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தபோது  ஒரே ஒரு இடத்தைத் தவிர மற்ற இடங்களில் அதிமுக  வேட்பாளர் அவருடன் இல்லை. அதிமுக தலைமைப் பொறுப்பில் இருப்பவரும் உடன் செல்லவில்லை. அந்த அளவுக்கு பாஜகவை  அதிமுக புறக்கணிக்கிறது. ஆனால், எங்கள் கூட்டணியில் நாங்கள் அத்தனை புரிதலுடன் தேர்தல் பணிகளை கவனித்திருக்கிறோம்.

ஜோதிமணி
ஜோதிமணி

பணநாயகத்தால் கிடைக்கும் வெற்றியைத்தான் நம்புகிறீர்களா? 

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.  யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. அதிமுக தான் கடந்த தேர்தல்களில் அராஜகமான  ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது.  நானே அதை எதிர் கொண்டிருக்கிறேன். கடந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வன்முறைகளையும்,  தேர்தல் அராஜகங்களையும் அதிமுகவால் தான் நான் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும்  ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். நீங்கள் எதைக் கொடுத்தாலும், என்ன செய்தாலும் மக்களின் முடிவு மாறாது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்,  எங்கள் வேட்பாளரே பெருவெற்றி பெறுவார். 

அதற்குக் காரணம், பணநாயகம் இல்லை; ஜனநாயகம் தான் என்பதை மீண்டும் சொல்கிறேன். ஒரு சிறப்பான அரசாங்கம்,  வலிமையான கூட்டணி, பெரிய குடும்பத்திலிருந்து வந்த  சிறப்பான வேட்பாளர், என்று அனைத்துமே எங்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. ஆனாலும் அனைவருமே களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறோம். அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து மக்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள். நாங்கள் மகத்தான வெற்றியைப் பெறுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in