`அதிகம் ஆடாதீங்க‌, ஒட்ட நறுக்கி விடுவோம்'- தமிழக அமைச்சர்களை மிரட்டும் கருப்பு முருகானந்தம்

கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜகவினர்
கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜகவினர்

``திமுக அமைச்சர்கள் அதிகமாக ஆடக் கூடாது, அப்படி ஆடினால் ஓட்ட நறுக்கி விடுவோம்'' என்று பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா கைதைக் கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இன்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மீது தமிழக காவல்துறை வேண்டுமென்றே பொய்வழக்கு பதிந்திருக்கிறது. அவர் கார் மீது மோதிய தனியார் பேருந்துக்கு பர்மிட் இல்லை, இன்சூரன்ஸ் இல்லை என்றபோது அந்த பேருந்தை ஆர்.டி.ஓ., கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் ஒருதலைபட்சமாக காவல்துறை நடந்து கொண்டது.

பேருந்தினை சூர்யா கடத்தி வந்து பெட்ரோல் பங்க்கில் நிறுத்தவில்லை. அந்த பேருந்தின் ஓட்டுநர்தான் கொண்டு வந்து நிறுத்தினார். சூர்யா திமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்ததை பொறுக்க முடியாத திமுக தலைமையிலான தமிழக அரசு காவல்துறை ஏவி விட்டு சூர்யா மீது பொய்வழக்கு போட்டிருக்கிறது.

பாஜக விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போகிறது. திமுகவினராக இருக்கட்டும், அமைச்சர்களாகட்டும், அதிகமாக ஆடக்கூடாது, அப்படி ஆடினால் ஒட்ட நறுக்கிடுவோம். அமைச்சர்கள் ஒவ்வொருத்தர் செய்யும் ஊழல் பட்டியல் எங்களிடம் இருக்கிறது. கூடிய விரைவில் அவற்றை மக்கள் மன்றத்தில் வைப்போம்.

திமுகவின் ஏவல்துறையாக இருக்கும் காவல்துறையும் அதிகம் ஆடக்கூடாது, ஒட்ட நறுக்கி விடுவோம், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று மிரட்டல் விடுத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in