எடப்பாடிக்கு கொங்கு மண்டலமே சங்கு ஊதிவிட்டது: கருணாஸ் காட்டம்

எடப்பாடிக்கு கொங்கு மண்டலமே சங்கு ஊதிவிட்டது: கருணாஸ் காட்டம்

அ.தி.மு.கவின் கோட்டை என்று பிதற்றிக் கொண்டிருந்த எடப்பாடிக்கு கொங்கு மண்டலமே சங்கு ஊதிவிட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ள நடிகரும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ், "ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு செய்யும் பாவமும், சசிகலாவுக்கு செய்த துரோகமும் இனி அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கும்" என்று சாபமிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க வென்றுள்ளது. அ.தி.மு.க சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.கவின் கோட்டை என்று பிதற்றிக் கொண்டிருந்த எடப்பாடிக்கு கொங்கு மண்டலமே சங்கு ஊதிவிட்டது. அ.தி.மு.கவிற்கு தோல்வியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.தி.மு.க தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? துரோகம்தான். பக்கத்திலேயே இருந்தோர்க்கு செய்த துரோகமும், தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகமும்தான் காரணம். அ.தி.மு.க தோல்வி மக்கள் தந்த பரிசு மட்டுமல்ல. சிறந்த பதிலும் கூட. நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அ.தி.மு.கவின் துரோகங்களைப் பட்டியலிட்டு அறிக்கை விட்டிருந்தேன். ஆனால், மக்கள் நான் எதிர்பார்த்ததைவிட கூடுதலான தோல்வியை அ.தி.மு.க கொடுத்துள்ளார்கள்.

இது தொடக்கம்தான். இன்னும் பல்வேறு விளைவுகளையும், தோல்விகளையும் அ.தி.மு.க எதிர்காலத்தில் சந்திக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் கூட்டணியே உடைத்து சுக்குநூறாக்கும். அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யும் பாவமும், சசிகலாவுக்கு செய்த துரோகமும் இனி அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கும்" என்று சாபமிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in