
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பத்தில் தவறில்லை ஆனால் அதனை திமுக தனது சொந்த செலவில் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசியதாவது, ‘’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றிப் பெறக்கூடாது என்பதால் சிறப்பாக பணியாற்றி வருகின்றோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிறந்த எழுத்தாளர் அவருக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதில் தவறு இல்லை. ஆனால் தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ள போது திமுக தனது சொந்தச் செலவில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அண்ணா அறிவாலயத்தில் அந்த நினைவுச் சின்னத்தை வைக்கலாம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிள்ளைகளாக அதிமுகவினர் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் அப்போது தான் திமுக என்னும் அரக்கனை வெல்ல முடியும் என ஓபிஎஸ் கூறி வருகிறார். அதுதான் என்னுடைய கருத்தும். பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக முயற்சி செய்தால் காங்கிரசுக்கு ஏன் கோபம் வருது. இன்னொரு கட்சியின் முதுகில் ஏறிக்கொண்டு நிற்காமல், தனித்து போட்டியிட்ட பின் விமர்சனம் செய்யட்டும். தற்போது ஒரு சிலரின் சுயநலத்தால் அம்மாவின் கட்சி பலவீனம் அடைந்துள்ளது. திமுகவை வீழ்த்துவதற்காக ஓரணியில் அனைவரும் திரளும் காலம் வரும்.’’
இவ்வாறு தினகரன் தனது பேட்டியில் தெரிவித்தார்.