கருணாநிதி: வசனங்களால் வாள் சுழற்றிய வார்த்தை வித்தகர்!

கருணாநிதி: வசனங்களால் வாள் சுழற்றிய வார்த்தை வித்தகர்!

அரசியலில் அசைக்க முடியாத ஆளுமையாக கருணாநிதி இருந்தாலும், அவருக்கு அதற்கான ராஜபாட்டையை அமைத்துக்கொடுத்தது சினிமாதான்.

1950-களில் தான் சினிமா பட்டிதொட்டியெங்கும் பரவத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில்தான் இந்தியா சுதந்திரமடைந்து தமிழக அரசியல் களத்திலும் புதுப்புது அரசியல் குரல்கள் எழ ஆரம்பித்திருந்தன. எனவே அப்போது சினிமா என்பது கலைப்படைப்பு என்பதைத் தாண்டி வரலாறு, புராணங்கள், அரசியல், இலக்கியக் கருத்துக்களின் களமாகவும் மாறியது. அந்தச் சமயத்தில்தான் கருணாநிதியின் திரைப் பயணமும் தொடங்கியது.

கருணாநிதி முதன்முதலாக 1947-ல் ‘ராஜகுமாரி' என்ற திரைப்படத்துக்கு வசனம் எழுதினார், இந்தத் திரைப்படத்தில்தான் எம்ஜிஆரும் முதன்முதலாகக் கதாநாயகனாக நடித்தார். கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்குமான நட்பு இந்தப் படத்திற்குப் பின்னர்தான் வலுவடைந்தது. முன்னரே பல நாடகங்களுக்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்தாலும் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே அவரது வசனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அவரை சாமானியர்களிடம் கொண்டு சேர்த்தது ‘மந்திரி குமாரி' படத்தில் இடம்பெற்ற வசனங்கள்தான். 1950-ல் வெளியான இப்படத்திலும் எம்ஜிஆரே கதாநாயகனாக நடித்திருந்தார். அதே ஆண்டில் எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான ‘மருதநாட்டு இளவரசி' படத்திலும் கருணாநிதியின் வசனங்கள் வார்த்தை ஜாலங்கள் செய்தன.

தமிழ் இலக்கியமான ‘குண்டலகேசி’யைத் தழுவி எடுக்கப்பட்டது ‘மந்திரி குமாரி’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் இலக்கிய நயத்தினை சாமானியர்களும் உணரும் வகையில் வசனங்களை எழுதியிருப்பார் கருணாநிதி. அந்த பாணி பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து எளிய மக்களுக்கும் புரியும் வகையில் அழுத்தமான வார்த்தைகளை தனது வசனங்களில் கையாள ஆரம்பித்தார்.

எம்ஜிஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி' படத்துக்கு வசனம் எழுதிய கருணாநிதிதான், சிவாஜி கணேசன் கதாநாயகனாக அறிமுகமான 'பராசக்தி'க்கும் வசனம் எழுதினார். 1952-ல் ‘பராசக்தி' படம் வெளியாகி தமிழ் சினிமாவையே ஸ்தம்பிக்க வைத்தது, முக்கியமாக அந்தப் படத்தின் வசனங்கள் அப்போது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கின. ஒரு வசனகர்த்தாவுக்குக் கதாநாயகன் அளவுக்கான வரவேற்பு கிடைக்குமென்பதெல்லாம் 'பராசக்தி' படத்தின் வசனங்கள் மூலமாகவே தமிழ்நாட்டில் நடந்தது.

அதனைத் தொடர்ந்து பல படங்கள் கருணாநிதி கதை, வசனங்களுக்காகவே ஓட ஆரம்பித்தன. மக்களும் அவரது வசனங்கள் இடம்பெற்ற படங்களுக்கு வரவேற்பளிக்கத் தொடங்கினார்கள். அதற்குப் பின்னர் நாம்', 'மனோகரா' படங்களின் வசனங்களும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து 'மலைக்கள்ளன்', 'எல்லாரும் இந்நாட்டின் மன்னர்', 'அரசிளங்குமரி', 'இருவர் உள்ளம்', 'காஞ்சித்தலைவன்', 'பூம்புகார்', 'மணிமகுடம்' உள்ளிட்ட பல படங்களில் கருணாநிதியின் கதை, வசனம் பெரும் வெற்றிபெற்றது.

1947-ல் 'ராஜகுமாரி'யில் தொடங்கி 1967-ல் 'வாலிப விருந்து' திரைப்படம் வரை 20 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதினார் கருணாநிதி. இதற்கிடையில் 1957 தேர்தலில் குளித்தலையில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினரானார். தொடர்ந்து 1962-ல் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்றார். 1967-ல் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைத்தது, அப்போது கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார், அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் 1969-ல் தமிழக முதல்வரானார் கருணாநிதி.

1967-க்குப் பின்னர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதை கருணாநிதி குறைத்துக்கொண்டார். குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் பணியாற்றினார். 1972-ல் தனது மகன் மு.க.முத்து கதாநாயகனாக நடித்த 'பிள்ளையோ பிள்ளை' படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். அதன்பின்னர் 'கண்ணம்மா', 'நெஞ்சுக்கு நீதி', 'மாடி வீட்டு ஏழை', 'பாலைவன ரோஜாக்கள்' உள்ளிட்ட பல படங்களுக்கும் வசனம் எழுதினார். 1987-ல் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்' படத்திற்கும் கருணாநிதிதான் கதை, வசனம் எழுதினார்.

1996-ல் 'புதிய பரவசம்' என்ற படம் கருணாநிதியின் வசனத்துடன் வெளியானது. அதற்குப் பிறகு 2005-ல் வெளியான ‘கண்ணம்மா' படத்திற்குத் திரைக்கதை எழுதினார். பிறகு தொடர்ந்து அவரது எழுத்தில் ’மண்ணின் மைந்தன்’, ’உளியின் ஓசை’, ’இளைஞன்’, ’பெண்சிங்கம்’, ’பாசக்கிளிகள்’ உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்தன. 2011-ல் பிரசாந்த் நடிப்பில் வெளியான 'பொன்னர் சங்கர்' திரைப்படத்துக்குக் கடைசியாக கருணாநிதி கதை, வசனம் எழுதியிருந்தார்.

தமிழ் உணர்வு, சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை, மூட நம்பிக்கை ஒழிப்பு, திராவிட கொள்கைகள் உள்ளிட்டவைதான் கருணாநிதியின் திரை வசனங்களின் சாராம்சமாக இருந்தன. அந்த எழுத்துகள்தான் அவரை எளிய மக்களின் நாயகனாகவும் கொண்டு சேர்த்தன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in