கலைஞர் வீட்டு குட்டி பி.ஏ-வின் கல்யாண கலாட்டா

மங்காத மலரும் நினைவுகள்
கலைஞர் வீட்டு குட்டி பி.ஏ-வின் கல்யாண கலாட்டா
திருமண நாளில் கருணாநிதியிடம் ஆசிபெறும் சண்முகநாதன் தம்பதி...

கோபாலபுரம் வீட்டுக்குள் நுழைந்து, வரவேற்பறைக்குள் வலதுபுறம் திரும்பினால், கருணாநிதியின் அறைக்குச் செல்வதற்கான மாடிப்படி. அந்தப் படியில் காலம் பொன் போன்றது, கடமை கண்போன்றது என்றொரு வாசகம் எழுதப்பட்டிருக்கும். அந்த வாசகமே தேவையில்லையோ என்று எண்ணுமளவுக்கு, அந்த எழுத்துக்கே உயிர்வந்தது போல, கீழே தன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து கர்மமே கண்ணாக பணியாற்றிக்கொண்டிருப்பார் சண்முகநாதன். கருணாநிதி மறைந்தாலும், ஒரு கட்சி அலுவலகம்போல கோபாலபுரம் இல்லம் செயல்பட்டுக்கொண்டிருக்கக் காரணம், அந்த வரவேற்பறையில் தொடர்ந்து பணியாற்றிய சண்முகநாதனும், மற்ற உதவியாளர்களும் தான். சண்முகநாதனின் மறைவு, அந்த அறையையும் இப்போது வெறிச்சோடச் செய்திருக்கிறது.

சண்முகநாதன் மறைவையொட்டி எத்தனையோ அஞ்சலிக் கட்டுரைகள் வந்துவிட்டன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கையேகூட, நெகிழ்ச்சியான அஞ்சலிக் கட்டுரையாகத்தான் இருந்தது. நிறைவாழ்வு வாழ்ந்தவர் சண்முகநாதன். எனவே, மேலும் மேலும் சோகத்தைப் பிழியாமல், சண்முகநாதனின் திருமணத்தையொட்டி கருணாநிதி வீட்டில் நடந்த கலாட்டாக்களை மட்டும் இங்கே நினைவுகூரலாம்.

கருணாநிதிக்குப் பின்னால் இளவயது சண்முகநாதன்
கருணாநிதிக்குப் பின்னால் இளவயது சண்முகநாதன்

சண்முகநாதனின் சொந்த ஊர் திருக்கண்ணமங்கை. அப்பா கோதண்டபாணி நாகஸ்வர வித்வான். கருணாநிதியின் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தபோது, அவரது மூன்று பி.ஏ-க்களில் சண்முகநாதன் தான் வயதில் ஜூனியர். அதனால் வீட்டில் இருந்தவர்கள் இவரை குட்டி பி.ஏ. என்றுதான் கூப்பிடுவார்கள். சுறுசுறுப்பானவர், நேர்மையானவர் என்பதால், இவரை எல்லோருக்கும் பிடிக்கும். ஆட்சி மாறினாலும் அரசுப் பணியைத் துறந்துவிட்டு, கருணாநிதி வீட்டிலேயே இருந்துகொண்டார் சண்முகநாதன்.

கருணாநிதியும் இவரைக் கைவிடவில்லை. தன் பிள்ளைகளில் ஒருவராகவே நடத்தினார். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம், சண்முகநாதனின் திருமணம். குட்டி பி.ஏ-வுக்கு கல்யாண வயதாகிவிட்டது என்றதும், பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் கலைஞர் குடும்பத்தினர். சொந்தத்தில் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லிவைத்தார் தயாளு அம்மாள். கடைசியில் காரைக்குடியில், சண்முகநாதனுக்கேற்ற பெண் கிடைத்தார். ஏழ்மைக் குடும்பம் தான் என்றாலும் பொருத்தமான பெண்ணாக இருந்ததால் பேசி முடித்துவிட்டார்கள். ஆனால், இந்த விஷயம் எதுவும் சண்முகநாதனுக்குத் தெரியாது. தந்தை கோதண்டபாணியும் மகனிடம் சொல்லவில்லை.

பொதுவாக, சினிமாவுக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்றால் தனிமைக்காக கருணாநிதி பெங்களூரு போய்விடுவார். அங்கிருக்கிற பெலகுல்லா ஓட்டல் அறை அவருக்கு ரொம்பப் பிடித்தமானது. ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் கதை வசனம் எழுதுவதற்காக துணைவி ராஜாத்தியம்மாள், மகள் கனிமொழி, இவர்களுடன் சண்முகநாதனையும் அழைத்துக்கொண்டு பெங்களூருவுக்குப் போனார். திரும்பி வரும்போது, பின் சீட்டில் கலைஞர், கனிமொழி, ராஜாத்தியம்மாள் அமர்ந்திருக்க, முன்சீட்டில் சண்முகநாதன் உட்கார்ந்திருக்கிறார். "இப்ப தனியா உட்கார்ந்திருக்கிற சண்முகநாதன், அடுத்தவாரம் இந்நேரம் பொண்டாட்டியோட உட்கார்ந்திருப்பான்ல..." என்று கருணாநிதி சொல்ல, எல்லோரும் சிரிக்கிறார்கள். சண்முகநாதனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

கிருஷ்ணகிரி பக்கம் ஓரிடத்தில், காபி குடிப்பதற்காக கார் நிறுத்தப்பட்டது. ராஜாத்தியம்மாள் எப்போது தனியே வருவார் என்று காத்திருந்து, அருகில் போய் பேச்சுக்கொடுக்கிறார் சண்முகநாதன். "அம்மா, தலைவரு ஏதோ கல்யாணம்னு சொன்னாரே என்னதும்மா?" என்று கேட்கிறார். “உங்களுக்குத் தெரியாதா சண்முகநாதன், செப்டம்பர் 6 உங்களுக்கு கல்யாணம். கலைவாணர் அரங்கத்துல..." என்கிறார் ராஜாத்தி. நம்ப முடியாமல் மறுபடியும் கேட்கிறார் சண்முகநாதன். "பத்திரிகையே அடிச்சாச்சு. அமைச்சர்கள், அதிகாரிகளுக்கெல்லாம் தலைவரே பத்திரிகை கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு" என்கிறார் ராஜாத்தியம்மாள்.

6.9.1971-ல் திருமணம். ஆனால், கல்யாணம் என்ற தகவலே 28.8.1971 அன்றுதான் மாப்பிள்ளை சண்முகநாதனுக்குத் தெரிகிறது.

தன் எண்ணத்தை எழுத்தாக்கியவருக்கு மோதிரம் பரிசளிக்கும் கருணாநிதி...
தன் எண்ணத்தை எழுத்தாக்கியவருக்கு மோதிரம் பரிசளிக்கும் கருணாநிதி...

பொண்ணு கருப்பா, சிகப்பானு கூட தெரியாது. போட்டோவைக்கூட யாரும் காட்டவில்லை. அப்போது இளைஞர்களாக இருந்த அழகிரியும், ஸ்டாலினும் புதுமாப்பிள்ளை சண்முகநாதனை ரொம்பவே கேலி செய்தார்கள். அந்த நேரத்தில் கருணாநிதி வேறு, வீட்டில் இல்லாததால் இவர்களுக்கு ரொம்பவே வசதியாகிவிட்டது. "பொண்ணை நாங்க பார்த்துட்டோம். பொண்ணு அவ்வளவு அசிங்கமா, கோரமா இருக்குது. பல்லு வேற வெளியே நீட்டிக்கிட்டு இருக்குது" என்று சரமாரியாகக் கிண்டிலடித்திருக்கிறார்கள் அண்ணனும் தம்பியும். முதலில் ஜாலியாக எடுத்துக்கொண்ட சண்முகநாதன், அவர்களுடன் சேர்ந்து வேறு சிலரும் கேலி செய்ததால் கொஞ்சம் பயந்துபோய்விட்டார். (அழகிரிக்கும் சண்முகநாதனுக்கும் 6 வயதுதான் வித்தியாசம்.)

விஷயம் வெளியூரிலிருந்து திரும்பிய கருணாநிதியின் காதுகளை எட்டியதும், கோபமாகிவிட்டார் மனிதர். "அவன் என்ன அநாதையா? நான் ஊர்ல இல்லைனா இப்படி எல்லாம் செய்வீங்களா?" என்று மகன்களைத் திட்டிவிட்டார். அய்யோ தம்பிகள் திட்டுவாங்குறாங்களே என்ற கவலையும், தலைவர் நம்மையும் ஒரு பிள்ளையா நினைக்கிறாரே என்ற சந்தோஷமும் ஒருசேர ஏற்பட்ட தருணம் அது என்று தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகப் பேட்டிக்காக சென்றிருந்தபோது, கண் கலங்கச் சொன்னார் சண்முகநாதன்.

சண்முகநாதனின் நெகிழ்ச்சி அதோடு முடியவில்லை. "எல்லோரும் குடும்பத்தோடு போய் பொண்ணு பார்த்துட்டு வந்துட்டீங்க. நான் ஓகே சொல்ல வேண்டாமா?" என்று கருணாநிதியிடம் கோபித்துக்கொண்டிருக்கிறார், மூத்த மகள் செல்வி. அப்போதுதான் அவருக்குப் பிரசவமாகியிருந்தது என்பதால், அழைத்துச்செல்லவில்லை. "இப்ப என்ன பொண்ணை பார்க்கணும் அவ்வளவுதான?" என்று சொன்ன கருணாநிதி, "பெண் வீட்டாரிடம் பேசி, மாப்ள வீட்டுக்காரங்க உங்க வீட்டுக்கு வந்தோம். அதேமாதிரி நீங்க பையன் வீட்டுக்கு வாங்க... அவன் வேலை பார்க்கிற இடத்தைப் பார்க்க வேண்டாமா?" என்று சொன்னார். பெண்ணை அழைத்துக்கொண்டு, அவர்களும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார்கள்.

அப்போதுதான் சண்முகநாதன், தன் வருங்கால மனைவியை முதன்முறையாகப் பார்த்தார். பெண் வீட்டுக்காரர்களிடம் யாரோ, "அவன் முன்கோபக்காரன், கலைஞரிடமே பொசுக்குன்னு மூஞ்சைத் தூக்கிடுவான்" என்று சொல்லியிருப்பார்கள் போலும். தயக்கத்தோடு பெண் வீட்டார் விசாரித்திருக்கிறார்கள். கருணாநிதி மறுக்கவில்லை. "கோபம் இருக்கிற இடத்தில்தானே குணம் இருக்கும்?" என்று சொல்லி பெண் வீட்டாரையும் ஆமாம் போட வைத்துவிட்டார். "பொண்ணு நல்லாயில்ல நல்லாயில்லைன்னு எல்லாரும் கிண்டல் பண்ணுனீங்களே, பொண்ணு நல்லாதானப்பா இருக்கு" என்று சொல்ல, சண்முகநாதன் முகத்தில் வெட்கம்.

தோள் கொடுத்த உதவியாளர்
தோள் கொடுத்த உதவியாளர்

அரசு மண்டபமான பாலன் அரங்கமிருந்த இடத்தில் கலைவாணர் அரங்கம் அப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது. அங்கே நடந்த முதல் கல்யாணமே சண்முகநாதன் கல்யாணம்தான். எல்லா வேலைகளையும் கருணாநிதியே முன்னின்று கவனித்தார். ஏழைப் பெண் என்பதால், தன்னுடைய நகைகளை எல்லாம் போட்டு பெண்ணை சிங்காரித்து மணமேடைக்கு அழைத்துவந்தார் ராஜாத்தியம்மாள். தயாளு அம்மாள் குடும்பத்திலும் அத்தனை பேரும் ஆஜர். ரிசப்ஷனிஸ்ட் அம்சமா இருக்கணும் என்று அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த, ஜி.சகுந்தலா என்கிற நாடக நடிகையை வரவேற்புக்கு நிற்க வைத்தார்கள்.

சண்முகநாதன் திருமணத்தின் போது...
சண்முகநாதன் திருமணத்தின் போது...

ஸ்டாலின்தான் மாப்பிள்ளைத் தோழன். கல்யாண ஆல்பத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அன்று எம்எல்ஏ ஹாஸ்டல் அருகே இருந்த பிரபல ஹோட்டலான சீதா கபேயில்தான் கல்யாணச் சாப்பாடு.

அப்போது எம்ஜிஆர் திமுகவில்தான் இருந்தார். ஆனால், அவர் திருமணத்துக்கு வரவில்லை. அப்போதே அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே லடாய் ஆரம்பித்துவிட்டது போல. (அடுத்த ஆண்டே எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிவிட்டார்.) அப்புறம் நடந்ததை சண்முகநாதன் வார்த்தைகளிலேயே கேட்போம்.

“எம்ஜிஆர் சார்பில் அவரது பி.ஏ. சொர்ணம் போன் போட்டு, ‘எம்ஜிஆர் காலையிலேயே கல்யாணத்துக்குப் புறப்பட்டு வந்தார். கார் பிரேக் டவுன் ஆகிடுச்சி. ரிசப்ஷன் எப்ப?ன்னு கேட்கச் சொன்னாரு’ என்றார். ‘ரிசப்ஷனெல்லாம் வெக்கலைங்க. சாயந்திரம் காரைக்குடிக்கு மாமனார் வீட்டுக்குப் போறோம்ங்க’ன்னு சொன்னேன். பின்னணியில், ‘நான் சட்டையை (டோப்பாவை) எல்லாம் கழட்டிட்டேன். அவனை வீட்டுக்குக் கூட்டிட்டு வாயா’ என்று எம்ஜிஆர் சொன்னதும் கேட்டது.

எம்ஜிஆர் கூப்பிட்டார் என்றதும் ஸ்டாலினும், அழகிரியும் குஷியாகிவிட்டார்கள். கலைஞர் அப்போது அங்கேயில்லை. உடனே, ஸ்டாலினும், அழகிரியும் அப்பாவுக்குத் தெரியாமல் என்னை டி.நகரில் இருக்கும் எம்ஜிஆர் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். என் தங்கையும் உடன் வந்திருந்தாள். அப்போதுதான் நான் எம்ஜிஆரை முதன்முறையாகத் தொப்பி இல்லாமல் பார்த்தேன். ‘வா.. வா...’ என்று கூப்பிட்டு, கை குலுக்கி, தோளைத் தட்டி ஒரு பெட்டியில் 9 வெள்ளி டம்ளர்களை வைத்து திருமணப் பரிசாகத் தந்தார். ‘ஒரு நாள் என் வீட்டுக்கு விருந்துக்கு வாங்க. ஜானகி கருவாட்டுக் குழம்பு அருமையாக வெப்பா’ என்றார் எம்ஜிஆர். நன்றி சொல்லிவிட்டு சந்தோஷமாக வீடு திரும்பினோம்.

அரசினர் தோட்டத்தில் இருந்த பார்ட்டி ஆபீஸில் தலைவரும், அமைச்சர்களும் மதியச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்தார்கள். அதற்குள் அவருக்குத் தகவல் வந்துவிட்டது போல. ‘எங்க போன... யாரைக்கேட்டு போன?’ என்றார் கோபமாக. ஸ்டாலின் தான் கூட்டிட்டுப்போனாரு என்றேன். ‘இன்னைக்கு கல்யாண நாள் உன்னைய எதுவும் திட்டக்கூடாது’ன்னு சொல்லி கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு நான் எம்ஜிஆர் வீட்டுக்குப் போகவேயில்லை. தலைவரைவிட எனக்கு யாரும் முக்கியம் கிடையாது” என்றார் சண்முகநாதன்.

உடன்பிறவா சகோதரனுக்கு கண்ணீர் அஞ்சலி
உடன்பிறவா சகோதரனுக்கு கண்ணீர் அஞ்சலி

பிற்காலத்தில் தனது ஆட்சியில், கருணாநிதியைச் சங்கடப்படுத்துவதற்காக சண்முகநாதன் மீதும் ஒரு வழக்கைப் போட்டார் எம்ஜிஆர். திருவல்லிக்கேணியில் இருந்த வீட்டில் விசாரணைக்காக புகுந்த போலீஸ் தாக்கியதில், சண்முகநாதனின் தந்தை காயமடைந்து விரைவிலேயே இறந்துபோனார். அந்தத் துக்கத்திலும் கருணாநிதியின் குடும்பம் முழுமையாகப் பங்கேடுத்தது. அப்பா இறப்புக்கு மட்டும் கருணாநிதி 3 முறை சண்முகநாதன் வீட்டுக்குப் போனார். அடக்கத்துக்கும் சுடுகாடு வரைக்கும் வந்தார். இப்போது அதேபோல சண்முகநாதன் மறைவுக்கும் ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமும் வந்தது. முதல்வராக இருந்தபோதும், மருத்துவமனை, இறப்பு, அடக்கம் என்று மூன்று முறை சண்முகநாதனுக்காக வந்தார் ஸ்டாலின்.

“அவரும் எங்கள் குடும்பத்தில் ஒருவர்தான்” என்று அப்பாவும் பிள்ளையும் சொன்னது பொய்யல்ல.

Related Stories

No stories found.