திருவள்ளுவர் சிலை வழியே கருணாநிதி செய்த நுண் அரசியல் !

கருணாநிதி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு
திருவள்ளுவர் சிலை வழியே கருணாநிதி செய்த நுண் அரசியல் !

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை திமுகவினர் தமிழகம் முழுவதுமே இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்பு ‘திராவிட மாடல்’ என்னும் முழக்கத்தை முன்வைத்து ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில் திராவிட மாடலுக்கான விதையை அன்றே தூவியவர் கருணாநிதி.

விவேகானந்தர் பாறை
விவேகானந்தர் பாறை

சர்வதேச சுற்றுலாத்தலமாக இருக்கும் பகுதி கன்னியாகுமரி. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கே திராவிடத்தின் குறியீடாகவே கருணாநிதி, அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவினார்.

இதுகுறித்து இராஜாக்கமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நரேஷ் கூறுகையில், “ஒரு நல்ல அரசியல்வாதி அடுத்தத் தேர்தலைப் பற்றி சிந்திப்பான். நல்ல தலைவன் தான் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பார். அந்தவகையில் கலைஞர் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்தவர். எங்கள் குமரிமண் இந்துத்துவ அரசியல் தலைதூக்கிய பகுதி. அதுமட்டுமின்றி குமரியின் அடையாளமாகவே விவேகானந்தர் பாறை மட்டுமே இருந்தது.

தன்னலமற்ற நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள். நான் இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்ற விவேகானந்தர் மிகப்பெரிய ஆன்மிக குரு. ஆனால் அவரே சிகாகோ மாநாட்டில் இந்துமத பிரதிநிதியாகப் பேசும்போது, ‘பல்வேறு நாடுகளில் இருந்தும், மதங்களில் இருந்தும் விரட்டப்பட்டவர்கள், துரத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் தேசத்தில் இருந்து வருகிறேன்’ என பேசினார். ஆனால் இன்று அந்த விவேகானந்தரும், இந்து மதமும் சங்பரிவார் அமைப்புகள் கையில் எடுத்து ஆடுகின்றன. முக்கடல் சங்கமத்தில் விவேகானந்தர் பாறையில் காவி கொடி பறக்கும்.

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

ஒருவகையில் அது இந்துத்துவ அடையாளமாகவே எதிர்காலத்தில் உணரப்படும் என்பதாலேயே, அதே முக்கடல் சங்கமத்தில் வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு, 133 அடி உயரத்தில் அவர் எழுதிய அதிகாரங்களைக் குறிப்பிடும் வகையில் சிலை அமைத்தார் கருணாநிதி. அதுமட்டும் இன்றி, இப்போது சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வருபவர்கள் விவேகானந்தர் பாறையைப் பார்ப்பதுபோல், ஆச்சர்யம் ததும்ப நம் வள்ளுவன் சிலையையும் பார்க்கிறார்கள். வட இந்தியர்களும், வெளிநாட்டினரும் இது யார் எனக் கேட்கும்போது, ‘அய்யன் திருவள்ளுவனின் பெயரையும், அவரின் குறள்பாக்களின் வலிமையையும்’ தெரிந்துகொள்கிறார்கள். வள்ளுவனின் புகழ் என்பது தமிழ்மண்ணின் புகழ். அந்தவகையில், திராவிட மாடலுக்கு 2000-ம் ஆண்டே கருணாநிதி விதை போட்டுவிட்டார். அதற்கு மு.க.ஸ்டாலின் உரமிட்டு வருகிறார்.”என்கிறார்.திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், கன்னியாகுமரி கடல்நடுவே மையம் கொண்டிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்கும் ஆய்வுப்பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை ஆச்சர்யத்துடன் பார்க்கும் தமிழகம் கடந்த சுற்றுலாப்பயணிகள் அவருடைய வரலாற்றையும் அறிந்து கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in