அதிமுக தலைமையை நீதிமன்றம் தீர்மானிப்பது ஏற்புடையதல்ல: பழநியில் தேங்காய் உடைத்து கார்த்தி சிதம்பரம் பேட்டி

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

அதிமுக வழக்கில் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. தலைமை போட்டிக்கு வரும் போது உறுப்பினர்களே முடிவு செய்ய முடியும். நீதிமன்றம் அதனைத் தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல. கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள மலைக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று வந்தார். மலைக்கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக வழக்கில் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. தலைமை போட்டிக்கு வரும் போது உறுப்பினர்களே முடிவு செய்ய முடியும். நீதிமன்றம் அதனை தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே சிறையில் அடைக்க வேண்டும். வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே சிறையில் அடைத்தது முறையல்ல.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுறுசுறுப்பாக வெளிப்படையான முதலமைச்சராக செயல்படுகிறார். இதனால், மக்களிடம் அவருக்கு நாள் தோறும் மதிப்பு அதிகரித்து வருகிறது" என்றார்.

சுங்கக் கட்டணம் உயர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், "மத்திய பாஜக அரசு ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பைத் தொடர்ந்து, எரிபொருட்களின் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு சரியான முறையில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தற்போது, சுங்கக் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். ஏற்கெனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கனரக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் சுமையை ஏற்படுத்தும். இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in