கார்த்தி சிதம்பரத்தின் பேச்சு தன்முனைப்பா, கருத்து சுதந்திரமா?

நாடாளுமன்ற வளாகத்தில்...
நாடாளுமன்ற வளாகத்தில்...

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், கனிமொழி கருணாநிதியுடன் இணைந்து 'கருத்து' என்றொரு இணையதளத்தை உருவாக்கினார். ‘கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுப்பதே எங்கள் லட்சியம்’ என்று அதன் தொடக்க நிகழ்ச்சியில் சொன்னார். இடையில், சமூக வலைதளத்தில் தன்னை விமர்சித்த ஒருவரை போலீஸில் புகார்கொடுத்து உள்ளே தள்ளிவிட்டார் என்றாலும், இப்போதும் சொந்தக் கட்சியில் சுயசிந்தனையோடு பேசுகிற தலைவராகவே எம்பி கார்த்தி ப.சிதம்பரம் கருதப்படுகிறார்.

முல்லை பெரியாறு பிரச்சினையா.. ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தே எங்கள் கருத்து. நீட் பிரச்சினையா.. அதிலும் திமுகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என்று கருத்துச் சொல்லிவருகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. ஆனால், இந்தச் சட்டத்துக்குள் சிக்காமல் பேசிக்கொண்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

உத்தரப் பிரதேசத்தில் கார்த்தி சிதம்பரம்
உத்தரப் பிரதேசத்தில் கார்த்தி சிதம்பரம்

திமுக ஆட்சிக்கு வந்ததுமே மீண்டும் லாட்டரி சீட்டைக் கொண்டுவரலாம் என்று யோசனை சொன்ன கார்த்தி, நீட் தேர்வு ரத்து விஷயத்தில் திமுகவுக்கு எதிரான கருத்தைச் சொன்னார். ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்தை வரவேற்றவர், கைது செய்யும்போது அரசியல் பழிவாங்கலும் ஒரு காரணியாக இருக்கிறதா என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தின் கருத்தை அடிக்கோடிட்டு ட்விட்டரில் மகிழ்ந்திருந்தார். சமீபத்தில் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அவர், சம்பந்தமே இல்லாமல், “சித்திரை 1 தான் எனக்கு புத்தாண்டு” என்றொரு கருத்தையும் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்தக் கருத்துகள் திமுகவை மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சியினருக்கும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. பொங்கலன்று சமூக வலைதளங்களில் திமுக, விசிக, மதிமுகவினர் மத்தியில் கார்த்தி சிதம்பரம் குறித்த விமர்சனமும் ஒரு பலகாரமாகப் பரிமாறப்பட்டது. உச்சகட்டமாகக் காங்கிரஸ் கட்சியின் ஆர்எஸ்எஸ் பிரிவு தலைவர் என்றெல்லாம் அவரை கேலி செய்தார்கள் திமுகவினர்.

இந்தச் சர்ச்சைகளைத் தொடர்ந்து தமிழ்த் தொலைக்காட்சி ஒன்று அவரை நேர்காணலுக்கு அழைத்தது. அதிலும் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்த கார்த்தி சிதம்பரம், “இங்கே சில விஷயங்களைப் பேசினால், பாஜக ஆதரவாளர் என்கிறார்கள். சில விஷயத்தைப் பேசினால் ஆன்டி இந்தியன் என்கிறார்கள். நான் என்ன செய்வது?” என்று கேட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவிலில் முடி காணிக்கை செலுத்திய கார்த்தி சிதம்பரம்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவிலில் முடி காணிக்கை செலுத்திய கார்த்தி சிதம்பரம்.

காங்கிரஸுக்குள்ளும் புகைச்சல்

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக மோடி பாதி வழியில் திரும்பிய சம்பவம் குறித்து அகில இந்தியத் தலைமையோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையோ அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால், கார்த்தி சிதம்பரம் துணிந்து மோடியை விமர்சித்தார். இந்த விஷயத்தில் எல்லாம் கட்சியின் கொள்கையை அப்படியே கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொன்னார்.

ஏற்கெனவே, காங்கிரஸில் சேர்ந்த சசிகாந்த் செந்தில் என்ற ஐஏஎஸ் அதிகாரியையும், செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவையும் விமர்சித்திருந்த நிலையில், இப்போது கார்த்தி பேசுவதெல்லாம் வெறும் கவன ஈர்ப்புக்கே என்றும், மாநிலத் தலைவர் பதவிக்கு வருவதற்கு அவர் எடுக்கிற முயற்சிகளில் ஒன்று இது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவாகவே காங்கிரஸில் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. கார்த்தி வேறு பெரிய இடத்துப் பிள்ளை. நாங்கள் என்ன செய்வது என்று மாநிலத் தலைவரே புலம்பியதாகச் சொல்கிறார்கள் காங்கிரஸார்.

இதுதான் காங்கிரஸ்!

இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், ஆந்திர மாநில பொறுப்பாளருமான கிறிஸ்டோபர் திலக்கிடம் கேட்டோம்.

"இந்தியாவிலேயே ஒரு குறிப்பிட்ட மதம், இனம், மொழி, வர்க்கம் சார்ந்து அரசியல் செய்யாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். எல்லோருக்குமான கட்சியாக இருப்பதால், சமூகத்தின் வெவ்வேறு தரப்பினரின் கருத்துகளும் கட்சிக்குள் பிரதிபலிப்பது வழக்கம்தான். முதலாளித்துவம், கம்யூனிஸம், சனாதனம், சமூகநீதி, இந்துக்கள், சிறுபான்மையினர், இந்தி ஆதரவு, இந்தி எதிர்ப்பு என்று எல்லாவற்றுக்கும் இங்கே ஆட்கள் உண்டு. பாலகங்காதரத் திலகர் இந்திய விடுதலையே நமது ஒரே இலக்கு என்று பேசியபோது, கோபால கிருஷ்ண கோகலே சமூக சீர்திருத்தத்தின் வழியாகவே விடுதலையை நோக்கி நகர வேண்டும் என்றார். அந்தக் கருத்து மோதலின் விளைவாக 1906-ல் திலகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதெல்லாம் கூட நடந்திருக்கிறது. காந்தி வந்துதான் அவர்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்தினார்.

இப்படி வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் கருத்து சொல்லும் போக்கு கடந்த 10, 15 ஆண்டுகளாக குறைந்துகொண்டேவந்து இன்று எதைப் பேசினாலும் தவறு என்ற நிலை வந்திருக்கிறது. காங்கிரஸில் என்றில்லை, ஒட்டுமொத்த இந்திய அரசியலே அப்படி மாறிவிட்டது. சுயமாகச் சிந்திப்பவர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும், கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கும் இங்கே இடமில்லை.

காங்கிரஸில் இருந்துகொண்டே சனாதானம் பேசியவர்கள் பலர், இன்று பாஜகவிலேயே போய்ச் சேர்ந்துவிட்டார்கள் என்பது உண்மைதான். ‘நான் இந்து, ஆனால் இந்துத்துவாவை எதிர்க்கிறேன்’ என்று நாடாளுமன்றத்தில் பேசிய ஒருவரை, ‘எனக்கு சித்திரை 1 தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று சொன்னதற்காக நீ ஏன் காங்கிரஸில் இருக்கிறாய், பாஜகவிலேயே சேர்ந்துவிடு என்று சொல்வது என்ன நியாயம்? அதுவும் திராவிட இயக்கத்தினர் இப்படிப் பேசுவது உண்மையிலேயே வருத்தம் தருகிறது. அடையாள அரசியல் பேசும் திராவிட இயக்கத்தினர் எத்தனை பேர், தங்கள் கொள்கையைச் சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்கள்? ப.சிதம்பரம் மட்டுமல்ல அவரது குடும்பத்தில் பலர் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள்தான். கோயில் வரி வசூலில்கூட அவரது குடும்பத்தை ஒதுக்கிவைத்திருப்பதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால், அதே நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பிறந்த கருப்புச்சட்டை அணிந்த கொள்கை வீரர் சுபவீ குடும்பத்தில், இன்னும் சொந்தச் சாதிக்குள்தானே திருமணம் செய்கிறார்கள்? திமுகவில் பி.டி.ஆர்., சேகர்பாபு உட்பட பலர் கோயில் வழிபாடுகளில் முன்வரிசையில்தானே நிற்கிறார்கள்? அவர்களைப் பார்த்து பாஜகவில் போய்ச்சேர் என்று யாராவது சொல்வார்களா?

கிறிஸ்டோபர் திலக்
கிறிஸ்டோபர் திலக்

பாஜகவுகுச் சாதகமாகிவிடும்

இப்படியெல்லாம் பேசுவதால், ஏதோ நான் ப.சிதம்பரத்தின் குடும்ப விசுவாசி என்று எண்ண வேண்டாம். கட்சிக் கூட்டங்களிலேயே பெரிய வீட்டுப் பிள்ளைகளின் வாரிசுகளுக்கு சீட் கொடுப்பதற்கு எதிராகக் கடுமையாகப் பேசியவன் நான். அவரும் கோபமாகி, 'பெரிய வீட்டில் பிறந்துவிட்டோம் என்பதற்காக நாங்கள் எல்லாம் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா?' என்று கேட்டிருக்கிறார். அது வேறு. ஆனால், சுயசிந்தனை உள்ளோர், அறிவுத்தளத்தில் செயல்படுவோரை மிரட்டும் போக்கு இனியும் தொடரக் கூடாது. அரசியலில் இருந்து இத்தகையோரை நீக்க நீக்க, அரசியல் களம் பாஜகவுக்குச் சாதகமானதாக மாறிவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்" என்றார் கிறிஸ்டோபர் திலக்.

நியாயம்தானே? பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததற்காக சுப்பிரமணியன் சுவாமியையும், தமிழ்நாட்டில் ராமசுப்பிரமணியனையும் ஒதுக்கிவைத்துவிட்டார்கள் பாஜகவினர். அதையேதான் மற்றவர்களும் செய்வார்கள் என்றால், இவர்கள் எப்படி பாஜகவுக்கு மாற்றாக முடியும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in