'அரசு செயல்படவில்லை, எப்படியோ சமாளித்துக்கொண்டிருக்கிறோம்' - லீக் ஆனது அமைச்சரின் ஆடியோ

'அரசு செயல்படவில்லை, எப்படியோ சமாளித்துக்கொண்டிருக்கிறோம்' - லீக் ஆனது அமைச்சரின் ஆடியோ

கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி, 'மாநில அரசு செயல்படவில்லை, அதிகாரிகள் எப்படியோ சமாளித்து வருகின்றனர்' என்றும் கூறியது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சன்னப்பட்டினத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பாஸ்கருக்கும் அமைச்சர் மதுசாமிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஆடியோ சனிக்கிழமை வைரலாக பரவியது. இந்த ஆடியோவில் பேசிய அமைச்சர் மதுசாமி, “நாங்கள் இங்கு அரசாங்கத்தை நடத்தவில்லை, எப்படியோ சமாளிக்கிறோம். அடுத்த 7-8 மாதங்களுக்கு ஆட்சியை இழுத்து வருகிறோம்” என தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவு பிரச்சினைகள் குறித்த இந்த தொலைபேசி உரையாடலில், "எனக்கு இந்த பிரச்சனைகள் தெரியும். இதை கூட்டுறவு அமைச்சர் சோமசேகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்ன செய்வது?" என சொல்லியுள்ளார்

இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர் பொம்மை, "அமைச்சர் மாதுசாமி வேறு ஒரு சூழலில் சொல்லியிருக்கிறார், எனவே அதை தவறான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் அவருடன் பேசுவேன். அவர் குறிப்பாக சில கூட்டுறவு தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி பேசியுள்ளார். விஷயங்கள் பரவாயில்லை, இது தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை. இது தொடர்பாக மதுசாமியை விமர்சிக்கும் சக அமைச்சர்கள் அனைவருடனும் நான் பேசுவேன்" என தெரிவித்துள்ளார்.

மதுசாமியின் கருத்துக்களால் சக அமைச்சர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அமைச்சர் மதுசாமி பதவி விலக வேண்டும் என தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனிரத்னா தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் சோமசேகரும் இதனை கடுமையாக கண்டித்துள்ளார் "அமைச்சர் மதுசாமி தான் ஒரு புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். முதலில் அதை அவர் தலையில் இருந்து அகற்ற வேண்டும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in