முட்டிக்கொள்ளும் பாஜக முதல்வர்கள்: எல்லை கிராமங்கள் யாருக்கு?

பொம்மை - ஃபட்நாவிஸ்
பொம்மை - ஃபட்நாவிஸ்

இரு அண்டை மாநிலங்கள். இரண்டிலும் பிரதானமாய் ஆள்வது பாஜக. ஆனபோதும் மாநில எல்லை பிரச்சினை என்று வந்ததும் இரு மாநில முதல்வர்களும் கச்சைக்கட்டி இறங்கி விடுகிறார்கள். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் அவ்வப்போது எழுந்தடங்கும் இந்த பிரச்சினை, தற்போது ஒரே கட்சியின் இரு முதல்வர்கள் மோதல் என்ற வகையில் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தை சிவ சேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு, பாஜக உடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்துகிறது. முதல்வராக சிவ சேனாவின் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் பதவி வகிக்கின்றனர். பெயர்தான் துணை முதல்வரே தவிர, ஷிண்டேவை ஓரம்கட்டி அங்கே பட்நாவிஸ் மட்டுமே பட்டையை கிளப்புகிறார். அந்த வகையில் அண்டை மாநிலமான கர்நாடகத்துடன் தொடரும் எல்லை பிரச்சினையிலும் அவரே தீவிரமாக களமாடுகிறார். அவருக்கு ஈடுகொடுத்து கர்நாடகத்தை ஆளும் பாஜக முதல்வரான பசவராஜ் பொம்மையும் பதிலடி தந்து வருகிறார்.

மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு அருகமை மாநிலங்களில் தொடரும் குழப்பமே மகாராஷ்டிர - கர்நாடக எல்லையிலும் நீடிக்கிறது. கர்நாடக எல்லைக்குள் இருக்கும் மராத்தி பேசும் கிராமங்களை மகாராஷ்டிரமும், மகாராஷ்டிர எல்லைக்குள் இருக்கும் கன்னட மொழி கிராமங்களை கர்நாடகமும் உரிமை கொண்டாடுகின்றன. கால்நூற்றாண்டு காலமாக தொடரும் இந்த உரசலில், கர்நாடகத்தின் பெல்காவியை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் இரு மாநிலங்களும் கடந்த 15 வருடங்களாக வழக்காடி வருகின்றன.

இந்த மொழியுரிமைக்கு அப்பால் தண்ணீர் பிரச்சினையும் இரு மாநிலங்களின் மோதலுக்கு முக்கிய காரணமாகிறது. கர்நாடக எல்லையோரம் தண்ணீர் வளம் மிகுந்திருக்க, மகாராஷ்டிர எல்லை கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தங்களை கண்டுகொள்ளாத மகாராஷ்டிர அரசைக் கண்டித்து ஏராளமான கிராம பஞ்சாயத்துகள் கடந்த வருடம் கர்நாடகத்துடன் இணையும் தீர்மானத்தை இயற்றி அதிர்ச்சி கொடுத்தன. இதை முன்வைத்தும் தற்போதைய மகாராஷ்டிர துணை முதல்வர் - கர்நாடக முதல்வர் இடையிலான வார்த்தைப் போர் வெடித்திருக்கிறது.

’எல்லை கிராமங்கள் எதையும் எங்கேயும் சேர அனுமதிக்க மாட்டோம்’ என்று மார் தட்டும் பட்நாவிஸ், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பெல்காவி மாவட்ட பிரச்சினைக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார். பதிலுக்கு ’பட்நாவிஸ் கனவு காண்கிறார்’ என்று தாக்குகிறார் கர்நாடக முதல்வர் பொம்மை. தண்ணீருக்காக எல்லைக்கோட்டை திருத்தி எழுத தயாராக இருக்கும் மகாராஷ்டிர எல்லை கிராமங்கள் மட்டுமன்றி, கன்னடர்கள் அதிகம் வசிக்கும் சோலாப்பூர் மாவட்டத்திலும் பொம்மை உரிமை கோருகிறார். அவருக்கு பதிலடியாக ‘விரைவில் எல்லை கிராமங்களின் தண்ணீர் பிரச்சினை தீர்வதற்கு புதிய திட்டங்களை அமல்படுத்தப் போகிறோம்’ என்று அறிவித்திருக்கிறார் பட்நாவிஸ். இது மட்டுமன்றி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பெல்காவி மாவட்ட வழக்கை கண்காணித்து விரைவுபடுத்த இரு மாநிலங்களும் தனிக்குழுக்களை நியமித்துள்ளன.

பாஜகவின் இரு முதல்வர்கள் தங்கள் எல்லை பிரச்சினையில் கடுமை காட்டுவதை, பாராட்டவும் தூற்றவும் ஆளிருக்கிறார்கள். ஒரே கட்சி என்ற போதும் பிராந்திய நலனுக்காக மல்லுக்கு நிற்கிறார்கள் பாருங்கள் என பாஜக அபிமானிகள் பாராட்டுகிறார்கள். இதன் மறுபக்கத்தில், ஒரே தேசம் அதில் ஒரே மொழி, ஒரே தேர்தல் என்று ஒரே புராணம் பாடும் பாஜக-வின் முழக்கம் மற்றும் கொள்கைகள் சொந்த கட்சியினரே மாநில எல்லைகளின் இருமருங்கில் இப்படி அடித்துக்கொள்ளலாமா என்ற ஏச்சுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in