தென்மாநிலங்களுக்கும் கேஜ்ரிவால் குறி: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்தென்மாநிலங்களுக்கும் கேஜ்ரிவால் குறி: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

வடமாநிலங்கள் மட்டுமின்றி தென்மாநிலங்களிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி, இதன் முதன்முயற்சியாக கர்நாடகாவில் அக்கட்சி களமிறங்குகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 60 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டது. ஏற்கெனவே கடந்த மார்ச் 20ம் தேதி 80 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது. அதில் 10 முக்கிய தேர்தல் உத்தரவாதங்களை அக்கட்சி அளித்துள்ளது. தாங்கள் ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.மேலும், ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் நிரப்புவதாக ஆம் ஆத்மி உறுதியளித்தது.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுப் பணிகளுக்கு கன்னட படிப்பு கட்டாயமாக்கப்படும். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளை சிறந்ததாக மாறும், தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், ஒழுங்குபடுத்தவும் குழு அமைக்கப்படும். மாணவர்களுக்கு இலவச மாநகர பேருந்து போக்குவரத்து வசதி வழங்கப்படும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 5,000 உதவித்தொகையுடன் ஆறு மாத வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் உருவாக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்களிக்கும் வயது 16 ஆக குறைக்கப்படும். பெண்களுக்கு இலவச நகரப் பேருந்து பயணம் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு "அதிகாரமளிக்கும் உதவித்தொகையாக" மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங், "இது வெறும் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல. இது 10 உத்தரவாதங்களின் பட்டியல், டெல்லி மற்றும் பஞ்சாபில் செய்தது போல் இங்கும் நாங்கள் இதனை நிறைவேற்றுவோம்" என்று கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 13-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தயாராகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in