தரமுடியாது... கர்நாடகத்தின் தண்ணீர் அரசியலால் உடையுமா திமுக - காங்கிரஸ் கூட்டணி?

மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தி

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ”தமிழகத்துக்கு தண்ணீர் தர இப்போதைக்கு வாய்ப்பில்லை” என கர்நாடக காங்கிரஸ் அரசு மீண்டும் கறாராக சொல்லிவிட்டது. கடந்த ஒரு வருடமாகவே காவிரியில் முறைப்படி தண்ணீர் திறக்காத காங்கிரஸ் அரசின் போக்கால், வரும் காலங்களில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை உருவாக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழகம் வரலாறு காணாத வெப்ப அலையில் சிக்கித் தகித்துக்கொண்டிருக்கிறது. இப்போதே ஆங்காங்கே குடிநீர் பிரச்சினையும் மக்களை தவிக்கவிடுகிறது. வெப்பத்தின் தீவிரம் அதிகமாகும் சூழலில் குடிநீர் பிரச்சினையும் அதிகமாகும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என அடம்பிடித்துள்ளது கர்நாடக அரசு.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு, ”கடந்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் 28ம் தேதி வரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு 174.497 டிஎம்சி தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 78.728 டிஎம்சி மட்டுமே திறந்துள்ளார்கள். எனவே 95.770 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது” என்று புள்ளி விவரத்தை கொடுத்து அதிரவைத்தது.

காவிரி நீர் திறப்பு - கிருஷ்ணராஜ சாகர் அணை
காவிரி நீர் திறப்பு - கிருஷ்ணராஜ சாகர் அணை

முக்கியமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு 7.3 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டுக்கு கர்நாடகா வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்து வெறும் 2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இதுவரை வந்துள்ளது. எனவே மீதமுள்ள நிலுவை நீரை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது தமிழக அரசு.

ஒழுங்காற்று குழு குறைந்தபட்சமாக தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி தண்ணீரையாவது கொடுங்கள் என்றார்கள். ஆனால் அதற்கும் முடியாது என கைவிரித்துவிட்டது கர்நாடகா. சென்னை, ராமநாதபுரம், திருச்சி, கரூர் என பல்வேறு நகரங்களுக்கும் காவிரி நீரே குடிநீர் ஆதாரம். சொற்ப அளவு தண்ணீர் கூட காவிரியில் வரவில்லை என்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமின்றி, தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தையும் உருவாக்கும்.

கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்த தண்ணீரை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் தமிழக அரசு திறந்துவிட்டது. ஆனால், அதன்பிறகு கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரை முறைப்படி கொடுக்கவேயில்லை. இதனால் குறுவை சாகுபடி கடைசி நேரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சம்பா, தாளடி விவசாயமும் நடக்கவில்லை. இதனால் காவிரிப் பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

எனவே இந்த ஆண்டு எப்படியாவது குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால், இப்போதுள்ள சூழலில் கர்நாடகா இதையெல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம். மேட்டூர் அணையில் இப்போது 52 அடிதான் தண்ணீர் இருக்கிறது. எனவே, குறுவை சாகுபடி என்பது இப்போதைய சூழலில் கானல் நீர்தான். இதுமட்டுமன்றி மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக அரசு அடிக்கடி தமிழ்நாட்டுக்கு பிரஷரை ஏற்றிக்கொண்டு இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

காவிரியில் நீர் திறக்க மறுத்து, மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று சொல்லிவரும் கர்நாடக காங்கிரஸ் அரசை, திமுக விமர்சிப்பதே இல்லை என மக்களவைத் தேர்தலிலேயே விமர்சனங்கள் எழுந்தன. வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினை, குறுவை சாகுபடி பாதிப்பு போன்றவை ஏற்பட்டால் இந்த விமர்சனங்கள் மேலும் வீரியமடையும். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியை உடைக்க, இந்த பிரச்சினையை அதிமுக, பாஜக கட்சிகள் நிச்சயம் பூதாகரமாக்கும்.

குடிநீர் பிரச்சினை, விவசாயம் பாதிப்பு போன்றவை மக்களுடன் நெருக்கமான பிரச்சினைகள். எனவே இது மக்கள் மத்தியில் அதிருப்தி அலையாக மாறவும் வாய்ப்புள்ளது. மக்கள் மத்தியில் எழும் அதிருப்திகளை சமாளிக்க திமுக ஒரு கட்டத்தில், காங்கிரஸை எதிர்க்கும் சூழல்கூட உருவாகலாம். அதேபோல கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மேகேதாட்டு விவகாரத்தை கையிலெடுத்து, திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸை கழட்டவும் ஸ்கெட்ச் போடலாம். எனவே, காவிரி விவகாரத்தால் இரண்டு பக்கமும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆபத்து சூழ்ந்து நிற்கிறது.

ராகுல் காந்தி சிவக்குமார் சித்தராமையா
ராகுல் காந்தி சிவக்குமார் சித்தராமையா

ஈழப்பிரச்சினை மற்றும் 2ஜி விவகாரத்தின் அதிருப்தி காரணமாக, 2014 மக்களவைத் தேர்தலின்போது திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிந்து, இரு கட்சிகளும் தனித்தனியே தேர்தலை சந்தித்தன. அதேபோல காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில் அதேபோன்ற நிலை 2026-ல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு செவிசாய்த்து கர்நாடக அரசு முறைப்படி தண்ணீர் திறக்க வேண்டும். அல்லது இயற்கையின் கொடையால் தேவைக்கு அதிகமான மழை பொழிந்து இரு மாநிலங்களையும் நிறைக்க வேண்டும். அப்படி இல்லாமல் தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை மற்றும் குறுவை சாகுபடி பாதிப்பு உருவாகுமே யானால், அது விவசாய பெருங்குடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மட்டும் முடிந்துபோகாது. மாறாக, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கே வேட்டு வைக்கும் சூழலையும் உருவாக்கலாம் என்பதே நிதர்சனம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in