
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்குவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் வலை வீசுகிறார் என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறிய முதல்வர் பசவராஜ் பொம்மை, " மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கடந்த இரண்டு மூன்று நாட்களாக, அவர்கள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத 100 தொகுதிகளில் உள்ள எங்கள் எம்எல்ஏக்களுக்கு போன் செய்து வருகிறார். நீங்கள் காங்கிரஸுக்கு வந்தால் நாங்கள் உங்களுக்கு சீட்டு தருவோம் என்று அவர் கூறுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் விரக்தியில் உள்ளனர், அவர்களுக்கு சரியான வேட்பாளர்கள் இல்லை, எனவே அவர் எங்கள் கட்சியினரை அழைக்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சி திவாலானது என்பதையே இது காட்டுகிறது" என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தனது 124 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை மார்ச் 25ம் தேதி வெளியிட்டது, இன்னும் 100 இடங்களுக்கான வேட்பாளர்களை அவர்கள் அறிவிக்கவில்லை. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் 150 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளன.