
லஞ்சம் வாங்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ மடல் விருபக்சப்பாவின் மகனின் வீட்டில் சோதனை நடத்தியதில் சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது, இது பாஜகவினருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி எம்எல்ஏவான மடல் விருபக்சப்பா, புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பை தயாரிக்கும் அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட் (கே.எஸ்.டி.எல்) தலைவராக உள்ளார். இவரது மகன் பிரசாந்த் மடல்பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (BWSSB) தலைமை கணக்காளராக உள்ளார்.
நேற்று கர்நாடகா லோக்ஆயுக்தா அதிகாரிகள் விருபக்சப்பாவின் மகனை, அவரின் அலுவலகத்தில் ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கும் போது பிடித்து அவரை கைது செய்தனர். அலுவலகத்தில் குறைந்தது ரூ. 1.75 கோடி மதிப்புள்ள மூன்று பைகளில் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2008-ம் ஆண்டு கர்நாடக நிர்வாகச் சேவை அதிகாரியான பிரசாந்த் மடல், சோப்பு மற்றும் இதர துணி சோப் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கான ஒப்பந்தத்திற்காக ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.81 லட்சம் லஞ்சம் கோரிய புகாரின் மூலம் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பிரசாந்த் மடலின் வீட்டில் சோதனை நடத்தியதில் பெரும் பணக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது, நேற்று நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடந்தது. இதன் மதிப்பு 6 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ மகன் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டிருப்பதால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.