
கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை இதுவரை நியமிக்காமல் இருக்கும் பாஜக மேலிடத்துக்கு எதிராக அம்மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் கடந்த மே 10ம்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களில்தான் வென்றது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 19 இடங்களைக் கைப்பற்றியது.
பாஜக கடந்த காலங்களைப்போல எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டாலும் ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு பெரும்பான்மைக்கு அதிகமான எம்.எல்.ஏக்கள் பலத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. இருந்த போதும் கர்நாடகா காங்கிரஸில் நிலவும் சித்தராமையா- டிகே சிவகுமார் இடையேயான மோதலில் எப்படியும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பாஜக காத்து கொண்டிருக்கிறது.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை பாஜக மேலிடம் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது. இது பாஜகவில் பெரும் புகைச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை கையில் எடுத்த காங்கிரஸ், பாஜகவை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறது. இது கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்களை தங்கள் மேலிட தலைமை மீது அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டம் இன்னும் சில நாட்களில் பெலகாவியில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத் தொடருக்குள் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை டெல்லி மேலிடம் அறிவிக்க வேண்டும்; அப்படி அறிவிக்காமல் போனால் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம் என பாஜக எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநில பாஜக எம்.எல்.ஏக்கள், அக்கட்சியின் டெல்லி தலைமைக்கு எதிராக இப்படி கலகக் குரல் எழுப்பி இருப்பது கர்நாடகாவில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது. நிலைமை மோசமாகி இருப்பதால் டெல்லி பாஜக தலைமையும் ஏதேனும் ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!