
பாஜகவில் இருந்து விலகுவேன் என்று ஒரு போதும் கூறவில்லை என்று கர்நாடகா பாஜக அதிருப்தி எம்எல்ஏ சிவராம் ஹெப்பர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. இதனால் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அவர் ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் முடிந்தும், மாநில பாஜக தலைவர், சட்டசபை, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாநில பாஜக தலைவராக, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். அடுத்த கட்டமாக, எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக, பெங்களூரு விட்டல் மல்லையா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியது. இதில் பத்மநாபநகர் எம்எல்ஏ ஆர்.அசோக் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த விஜயபுரா எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், கோகாக் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோலி, அரபாவி எம்எல்ஏ பாலச்சந்திர ஜார்கிஹோலி, மங்களூரு தெற்கு எம்எல்ஏ வேதவியாஸ் காமத், யஷ்வந்த்பூர் எம்எல்ஏ எஸ்டி சோமசேகர், எல்லப்பூர் எம்எல்ஏ சிவராம் ஹெப்பர் ஆகிய 6 பேர் கூட்டத்தை புறக்கணித்தனர்.
எதிர்கட்சித் தலைவராக ஆர்.அசோகாவை நியமிப்பதை அறிந்த யத்னாலும், ரமேஷ் ஜார்கிஹோலியும் கூட்டம் நடைபெறும் இடத்திற்குள் நுழைந்து கூட்டம் தொடங்கும் முன்பே வெளியேறினர். மாநிலத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளுக்கான போட்டியில் யத்னால் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சிவராம் ஹெப்பர், கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த அவர் பாஜகவில் இருந்து விலகப் போவதாக செய்தி பரவியது.
இது தொடர்பாக மௌனம் கலைத்த சிவராம் ஹெப்பர், பாஜகவில் இருந்து விலகுவேன் என்று ஒருபோதும் கூறவில்லை கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், " நான் அந்த கூட்டத்தில் இல்லாததற்கு சிறப்பு அர்த்த எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. சில பிரச்சினைகளால் கூட்டத்தை தவிர்த்து விட்டேன். நான் மட்டுமல்ல, ஆறு பேர் இருக்கிறார்கள். இதற்கு வட கர்நாடகாவைச் சேர்ந்த பல பாஜக தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.
மேலும்," கட்சிக்குள் பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பற்றி நான் பேசினேன். அதைப் பற்றி தொடர்ந்தும் பேசுவேன். பிரச்சினைகள் தீர்ந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்" என்றார் ஹெப்பர்.
முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரை ஹெப்பர் சந்தித்ததால், அவர் காங்கிரஸ் கட்சிக்கு செல்வார் என்ற யூகம் கர்நாடகாவில் நிலவி வருகிறது. ஏனெனில், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவர் தான் ஹெப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.