கர்நாடக தேர்தல்; எந்த மேஜிக்கும் நடக்கலாம்!

பெருத்த நம்பிக்கையில் காங்கிரஸ்... பெரும் திட்டத்துடன் பாஜக
மோடி ராகுல்காந்தி குமாரசாமி
மோடி ராகுல்காந்தி குமாரசாமிகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றி காங்கிரஸுக்கா? பாஜகவுக்கா?

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் உள்ள ஒரே பெரிய மாநிலம் கர்நாடகாதான். அதைத் தக்கவைக்க பாஜக இந்த தேர்தலை மிக முக்கியமாக பார்க்கிறது. அதேபோல இந்தியாவிலேயே காங்கிரஸ் பலமாக உள்ள ஒரு சில மாநிலங்களில் கார்நாடகாவும் ஒன்று. கர்நாடக கருத்துக்கணிப்பு முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக வந்துள்ளதால் காங்கிரஸும் பெருத்த நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறது.

மே 10-ம் தேதி கர்நாடக சட்டமன்றத்துக்குத் தேர்தல். முடிவுகள் மே13-ல் வெளியாகிறது. இம்மாநிலத்தில் தொடர்ந்து எந்தக் கட்சியும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால், அங்கே ஒரே முதல்வர் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்வதே சாதனைதான். இங்கு காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் என கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளன. 2008 முதல் 2013 வரையிலான பாஜக ஆட்சியில் எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என்ற மூன்று முதல்வர்கள் மாறினார்கள். அதனையடுத்து காங்கிரஸ் சார்பில் சித்தராமையா 2013 முதல் 2018 வரை ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார். இவருக்கு முன்னதாக காங்கிரஸின் தேவராஜ் உர்ஸ் 1972 முதல் 1977 வரை 5 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதற்குப் பின்னர் முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தது சித்தராமையாதான்.

சித்தராமையா சிவக்குமார்
சித்தராமையா சிவக்குமார்கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றி காங்கிரஸுக்கா? பாஜகவுக்கா?

2018 தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வென்றது. தனிப்பெரும் கட்சி என்ற உரிமையில் ஆட்சியமைத்தது எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு. ஆனால், அந்த ஆட்சி ஆறே நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணியின் முதல்வராக குமாரசாமி 1 வருடம் 64 நாட்கள் பதவியில் இருந்தார். பின்னர் எடியூரப்பா 2 ஆண்டுகளும், அதன்பின்னர் பசவராஜ் பொம்மையும் பாஜக ஆட்சியை நிறைவு செய்துள்ளனர்.

இப்படி அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறும் மாநிலமாக கர்நாடகா இருப்பதால், இந்த தேர்தலிலும் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை. பாஜக, காங்கிரஸ் இரண்டும் தேசிய கட்சிகள் என்றாலும், கன்னட மொழி, கன்னடப் பெருமை, கர்நாடக மாநில உரிமை என இரு கட்சிகளுமே பிராந்திய கட்சிகளைப் போலவே தீவிரமாக களமாடுகின்றன. அதுபோல லிங்காயத்துகள், ஒக்காலிகாக்கள் என சாதிரீதியிலான கணக்குகளும் இங்கே பரபரக்கவைக்கின்றன. ஆக, அரசியல் கட்சிகளின் ஆடுபுலி ஆட்டங்கள் இங்கே அதிகமென்றே சொல்லலாம்.

பாஜகவின் பலே வியூகம்!

தென்னிந்திய மாநிலத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சியமைக்க காரணமான எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விடைபெற்றுவிட்டார். இதனால் முதல்வர் முகமாக பெரிய அளவில் யாரையும் இங்கே முன்னிறுத்த முடியவில்லை. மற்ற மாநிலங்களைப்போல இங்கேயும் மோடியின் முகமே பாஜகவின் முகமாக முன்னிறுத்தப்படுகிறது. அடுத்தாக இங்கே மாநில அரசின் சாதனைகளை விடவும் மத்திய அரசின் சாதனைகளே பாஜக சார்பில் அதிகம் பேசப்படுகிறது. அப்படிப் பார்த்தால் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் பாஜகவினர் இப்போதே தொடங்கிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை
கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கைகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றி காங்கிரஸுக்கா? பாஜகவுக்கா?

ஹிஜாப் சர்ச்சை, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து என கடந்த சில ஆண்டுகளாகவே இந்து வாக்காளர்களை குறிவைத்தே கர்நாடக பாஜக நகர்ந்தது. தேர்தல் பிரச்சாரத்திலும், இது குறித்த வாதங்களே அதிகம் அடிபடுகிறது. பாஜக தனது தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம், 5 கிலோ அரிசி - தானியம் இலவசம், 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை, 3 இலவச சிலிண்டர், தினம் அரை லிட்டர் பால் இலவசம், சலுகை விலை உணவகம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அள்ளி தெளித்துள்ளது. இலவசங்களுக்கு எதிராகப் பேசும் பாஜக, எப்படி இத்தனை இலவச அறிவிப்புகளை வெளியிடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வியும் பிரச்சாரத்தில் சூடுபிடித்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில், பாஜக 26 தொகுதிகளில் வென்று அசத்தியது. தென்னிந்தியாவில் பாஜக இங்கு மட்டுமே அதிக இடங்களில் வாகை சூடியது. எனவே வரும் மக்களவைத் தேர்தலிலும் இதனைத் தொடர தற்போதைய சட்டமன்றத் தேர்தல் வெற்றி முக்கியம் என நினைக்கிறது பாஜக தலைமை. இதனால்தான், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கர்நாடகாவிலேயே அதிக நாட்கள் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் இறங்கினர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றி காங்கிரஸுக்கா? பாஜகவுக்கா?

கை’வசமாகும் நம்பிக்கையில் காங்கிரஸ்!

கர்நாடகாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறித்தான் கட்சிகள் ஆட்சிக்கு வரும். எனவே இந்த முறை நமக்குத்தான் வெற்றி என்ற நம்பிக்கையோடு இருக்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் மாநில தலைவராக இருக்கும் டி.கே.சிவக்குமாரின் சுறுசுறுப்பான செயல்பாடு அந்தக் கட்சிக்கு ஆகப்பெரும் பலம். அதுபோல ஈகோ இல்லாமல் சித்தராமையாவும் களத்தில் இறங்கியுள்ளார். இவர்கள் இருவருமே ஒற்றுமையாக காங்கிரஸின் முகமாக முன்னிறுத்தப்படுவது அக்கட்சிக்கு பெரும் பிளஸ்.

இந்தத் தேர்தலில் கதாநாயகன் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைதான். குடும்பத் தலைவிகளுக்கு 2,000 ரூபாய், 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், 10 கிலோ உணவுதானியம் இலவசம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000 நிதியுதவி என்பது உள்ளிட்ட காங்கிரஸின் பல்வேறு அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன.

அதேபோல பாஜகவை கட்டம் கட்டும் விதமாக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்தள் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கையே நம்மை அரியணையில் ஏற்றும் நம்பிக்கையோடு இருக்கின்றனர் காங்கிரஸார். அதுபோல ‘40 சதவீத கமிஷன் அரசு’ என்ற பிரச்சாரத்தையும் பாஜகவுக்கு எதிராக முக்கியமாக முன்வைக்கிறார்கள்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றி காங்கிரஸுக்கா? பாஜகவுக்கா?

இந்தியாவில் 3 மாநிலங்களில் மட்டுமே தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்கள் இந்த ஆண்டில் தேர்தலை சந்திக்கவுள்ளது. எனவே, கர்நாடகாவின் வெற்றி தற்போதைய நிலையில் மிக அவசியம் என்ற சூழலில் அக்கட்சி உள்ளது. இதை உணர்ந்தே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்தனர். பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தங்கள் பக்கம் வந்ததையும் கூடுதல் பலமாகப் பார்க்கிறது காங்கிரஸ். தொடர் தோல்விகளை சந்திக்கும் தங்களுக்கு ‘எனர்ஜி டானிக்’ காக கன்னட தேசம் கைகொடுக்கும் என்ற உற்சாகம் கட்சியினரிடையே இப்போதே தெரிகிறது.

கிங்மேக்கராகும் கனவில் குமாரசாமி!

கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்ததாக கிங் மேக்கர் அரசியல் கட்சியாக உள்ளது தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிதான். இவர்கள் கடந்த ஆண்டே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டார்கள். அதுபோல மிகவும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அறிவித்து கவனம் ஈர்த்துள்ளார் குமாரசாமி.

மாநிலம் முழுதும் 209 வேட்பாளர்களை நிறுத்தியிறுந்தாலும், இக்கட்சி கர்நாடகாவின் மாண்டியா, ஹசன், மைசூரு, ராமநகரா, துமாகுரு ஆகிய மாவட்டங்களில் பலமாக உள்ளது. எனவே, சர்ஜிகல் ஸ்டிரைக் முறையில் துல்லியமாக 60 முதல் 80 தொகுதிகளை குறிவைத்து அதில் எப்படியும் 40 தொகுதிகளையாவது வெல்லவேண்டும் என்ற முனைப்போடு வேலைபார்த்திருக்கிறார்கள். ஒருவேளை, தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் கடந்த காலங்களைப் போலவே இம்முறையும் தனக்கு லக் அடிக்கலாம் என்ற கனவில் மிதக்கிறார் குமாரசாமி. முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சியும் இங்கே 209 தொகுதிகளில் தனித்து களமிறங்கி நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறது.

குமாரசாமி
குமாரசாமிகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றி காங்கிரஸுக்கா? பாஜகவுக்கா?

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரும் அனைத்து தேர்தல்களுமே பாஜக – காங்கிரஸ் கட்சிகளுக்கு மிக முக்கியம். கர்நாடகாவின் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸின் பேரைச் சொன்னாலும், பாஜக வெல்வதற்கான வாய்ப்புகளும் இந்த தேர்தலில் பெருமளவில் உள்ளன. ஒருவேளை, தங்களால் ஆட்சியமைக்க முடியாமல் போனாலும் குமாரசாமியை அரியணையில் அமர்த்தி காங்கிரஸை ஆட்சியமைக்கவிடாமல் தடுக்கும் முயற்சியில் பாஜக இறங்கும். அதை சாதித்ததும், ஆட்சி அதிகாரத்தை வைத்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை கொத்தாக தங்கள் பக்கம் இழுத்து குமாரசாமியையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பாஜகவே அதிகாரத்தைப் பிடிக்கலாம். எனவே கர்நாடக தேர்தலில் எந்த மேஜிக்கும் நடக்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in