பாஜகவை பின்னுக்குத் தள்ளியது காங்கிரஸ்: பெரும்பான்மை கிடைக்குமா?

கர்நாடகத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் - பாஜக - ஜனதா தளம்(ம) கட்சிகள்
கர்நாடகத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் - பாஜக - ஜனதா தளம்(ம) கட்சிகள்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

கர்நாடகாவில் இன்று காலை தொடங்கிய தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை பெற்றது. அதற்கு பின்பு தொடர்ந்து நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், தற்போது பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 107 தொகுதிகளில் காங்கிரஸூம், 90 தொகுதிகளில் பாஜகவும், 22 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை பெற்றுள்ளன. பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக முடிவுகள் இருக்கும் என்று கூறிய நிலையில், அதையே தேர்தல் முடிவுகளும் பிரதிபலிக்கின்றன. கர்நாடகாவில் 113 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த பெரும்பான்மையை காங்கிரஸ் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்டடனர். இதில் 184 பெண்களும், ஒரு திருநங்கையும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 144 போடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்பது இன்று மதியத்துக்குள் தெரிந்து விடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in