காங்கிரஸிலிருந்து வெளியேறிய கபில் சிபல்: காரணம் என்ன?

காங்கிரஸிலிருந்து வெளியேறிய கபில் சிபல்: காரணம் என்ன?

காங்கிரஸ் மூத்த தலைவரும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான கபில் சிபல், அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறார். அத்துடன் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் மாநிலங்களவைக்குப் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். மே 16-ம் தேதியே காங்கிரஸிலிருந்து விலகிவிட்டதாகக் கூறியிருக்கும் கபில் சிபல், சமாஜ்வாதி கட்சியில் சேரவில்லை என்றும் அக்கட்சியின் ஆதரவில்தான் போட்டியிடுவதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில், உத்தர பிரதேசத்திலிருந்து 11 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் கபில் சிபலும் ஒருவர் என்பது உறுதியாகிவிட்டது. எனினும், இந்த முறை அவர் காங்கிரஸ் சார்பில் அல்லாமல், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிடுவது அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியினர் தொடர்பான முக்கிய வழக்குகள் முதல் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியவர் கபில் சிபல். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை எனப் பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பதவிவகித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்திய ஜி23 தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர்.

அனுபவம் வாய்ந்த தலைவரான குலாம் நபி ஆசாத் நாடாளுமன்றத்திலிருந்து ஓய்வுபெற்றபோது, அவரைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என ஜி23 தலைவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். “நாடாளுமன்றத்திலிருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டது எங்களை வருத்தமுறச் செய்திருக்கிறது. விமானம் பறக்க வேண்டும் என்றால், அதைச் செலுத்தும் விமானி அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் அல்லவா? விமானியுடன் ஒரு பொறியாளரும் இருப்பார். இன்ஜினில் ஏதாவது கோளாறு என்றால் அதை அவர் சரிசெய்துவிடுவார். குலாம் நபி அனுபவம் வாய்ந்த விமானி மட்டுமல்ல, பொறியாளரும்கூட” என்று கபில் சிபல் பேசியிருந்தார்.

கூடவே, நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்த நிலையில், சோனியா குடும்பம் பதவி விலகி, வேறு யாரேனும் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கபில் சிபல் கூறியிருந்தார். "நான் அனைவருக்குமான காங்கிரஸ் வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், சிலரோ, வீட்டுக்கான காங்கிரஸ் வேண்டும் என விரும்புகிறார்கள்" என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து அவருக்குக் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். “கபில் சிபல் காங்கிரஸ் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர் அல்ல. புகழ்பெற்ற வழக்கறிஞரான அவர் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்தார். சோனியாவும் ராகுலும்தான் அவருக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்தனர். காங்கிரஸின் அரிச்சுவடிகூட தெரியாத ஒருவர் இப்படியெல்லாம் பேசுவது எதிர்பார்த்த ஒன்றுதான்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதேபோல், தான் இடம்பெற்றிருந்த ஜி23 குழு தொடர்பாகப் பேசியிருந்த கபில் சிபல், கட்சித் தலைமைக்கு ‘ஜீ ஹுஜூர்!’ (ஆமாம் சாமி!) சொல்பவர்கள் அல்ல அக்குழுவினர் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அவரது வீட்டைக் காங்கிரஸ் தொண்டர்களே தாக்கிய விநோதமும் நடந்தது.

சமாஜ்வாதியுடன் என்ன சம்பந்தம்?

மூத்த வழக்கறிஞர் எனும் முறையில் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் கபில் சிபலுக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. சமாஜ்வாதி கட்சிக்கு ‘சைக்கிள்’ சின்னம் கிடைக்க தேர்தல் ஆணையத்திடம் வாதிட்டவர் அவர்தான்.

பல்வேறு வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் ராம்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆஸம் கானின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது கபில் சிபல்தான். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த ஆசம் கான், சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in