கன்னியாகுமரி தொகுதியில் விஜயதரணியை களமிறக்குகிறதா பாஜக?

விஜயதரணி பாஜகவில் இணைந்த போது...
விஜயதரணி பாஜகவில் இணைந்த போது...

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏ-வை வளைக்கும் முயற்சியில் பாஜக முதல் முறையாக வெற்றி கண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான விஜயதரணி பாஜகவில் இணையவிருப்பதாக சில நாட்களாகவே செய்திகள் கசிந்தன. அதற்கேற்ப விஜயதரணியும் சட்டமன்றக் கூட்டத்தைகூட புறக்கணித்துவிட்டு டெல்லியில் முகாமிட்டார்.

ஊடகங்கள் கேட்டபோது, தான் பாஜகவின் இணையப் போகும் செய்தியை விஜயதரணி மறுக்கவில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவர் கு. செல்வபெருந்தகைதான் அதை மறுத்தார். தங்களுடன் விஜயதரணி தொடர்பில் இருப்பதாக அனைவரையும் அவர் நம்பவைத்தார்.

இந்நிலையில், இன்று டெல்லியில் பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கிறார் விஜயதரணி. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரை பாஜக தன் பக்கம் இழுத்து பரபரப்பூட்டியுள்ளது. இதுவரை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு எம்எல்ஏ-க்கள் சென்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் பாஜகவால் அதைச் சாதிக்க முடியாமல் இருந்தது. விஜயதரணி மூலம் அதை சாதித்துக் காட்டியிருக்கிறது.

விஜயதரணி
விஜயதரணி

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை மீறி பாஜகவால் எழுந்திருக்க முடியாது என்ற நினைப்பு இருந்ததால் காங்கிரஸார் யாரும் பாஜகவுக்கு செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பாஜகவை பேசு பொருளாக்கும் அளவுக்கு கட்சியின் மீது கவனம் குவிக்க வைத்திருக்கிறார். பாஜகவுக்கு தமிழகத்தில் எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தற்போது தனித்து போட்டியிடுவதன் மூலம் தெரிய வரும் என்றாலும், ஓரளவுக்கு கெளரவமான வாக்கு வங்கியை அக்கட்சி பெறும் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

இந்தச் சூழலில்தான் தமிழகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரை தங்கள் பக்கம் இழுத்து தமிழகத்து கதர்பார்ட்டிகளையும் கதறவிட்டிருக்கிறது பாஜக. இது இத்துடன் நிற்காது இன்னும் சிலரையும் காங்கிரசிலிருந்து பாஜக இழுக்கும் என்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்த் போட்டியிடுவது உறுதி என்பதால் தான் விஜயதரணி பாஜகவுக்கு நகரும் முடிவை எடுத்ததாக அவருடைய ஆதரவாளர் சொல்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை 2021-ல் விஜயதரணி எதிர்பார்த்தார் என்றும் அது கிடைக்காததால் அதிருப்தி அடைந்ததாகவும் காங்கிரசில் சொல்கிறார்கள். சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி கிடைக்காத நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை விஜயதரணி எதிர்பார்த்தார். அதையும் செல்வபெருந்தகைக்குக் கொடுத்தவர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியையும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு காங்கிரஸ் எம்எல்ஏ-வான ராஜேஷ்குமாருக்கு கொடுத்துவிட்டார்கள். தரணியின் பாஜகவை நோக்கிய பயணத்துக்கு இந்த அதிருப்திகள் எல்லாமும் தான் காரணம் என்கிறார்கள்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே விளவங்கோடு தொகுதியில் விஜயதரணிக்கு காங்கிரஸ் மேலிடம் உடனடியாக சீட் தரவில்லை. அவருடைய பெயர் கடைசி பட்டியலில்தான் இடம் பெற்றது. அவருடைய பெயர் அறிவிக்கப்படும்வரை பாஜகவும் அந்தத் தொகுதியில் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் இருந்தது. ஒருவேளை விஜயதரணிக்கு காங்கிரஸில் சீட் கிடைக்காவிட்டால், பாஜகவுக்கு வந்தால், அவருக்கு சீட் தர அக்கட்சி தயாராகவே இருந்தது. 

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்L_Balachandar

இந்நிலையில், தற்போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட விரும்பினார் விஜயதரணி. ஆனால், அதற்கு காங்கிரஸ் தரப்பில் சரியான பதில் இல்லை. அதனால் காங்கிரசுக்கு பாடம் புகட்ட கன்னியாகுமரி தொகுதியை குறிவைத்தே விஜயதரணி பாஜகவுக்கு தாவி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், ஏற்கெனவே குமரியில் பலமுறை போட்டியிட்டு மத்திய அமைச்சர் வரைக்கும் அந்தஸ்து உயர்ந்திருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் விஜயதரணிக்காக தனது இருப்பை விட்டுக் கொடுப்பாரா... அப்படி அவர் விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கான அடுத்த இலக்கு என்ன என்பதற்கும் பாஜக பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

எப்படிப் பார்த்தாலும், மாற்றுக் கட்சிகளில் இருந்து மக்கள் செல்வாக்குள்ள தலைகளை இழுக்க திட்டமிடும் பாஜக, தன் மீதான நம்பகத் தன்மையை ஸ்திரப்படுத்த விஜயதரணி எதிர்பார்க்கும் எதையாவது நிச்சயம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in