‘எதற்கு இந்தி?’ - அமைச்சரை ஆங்கில மொழியில் பேசவைத்த கனிமொழி!

‘எதற்கு இந்தி?’  - அமைச்சரை ஆங்கில மொழியில் பேசவைத்த கனிமொழி!

மக்களவையில் இன்று திமுக எம்.பி-யும் மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எழுப்பிய ஒரு கேள்விக்கு மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார். அப்போது, இந்தியில் பேசிய அவரிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு கனிமொழி கேட்டுக்கொண்டார். இதையடுத்து பியூஷ் கோயல் ஆங்கிலத்தில் பேசினார்.

ஆங்கிலக் கேள்வி... இந்தி பதில்

கனிமொழி எழுப்பிய துணைக் கேள்வியில், “தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறோம். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறோம். இந்த நிலையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான செலவை மாநில அரசு ஏற்க வேண்டுமா? ஒன்றிய அரசு ஏற்க வேண்டுமா? பொது விநியோகத் திட்டம் என்பது மாநில அரசின் கீழ் வருவது. அதனால் இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளிக்க எழுந்த அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியில் பேசத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட கனிமொழி, “நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டேன். அமைச்சருக்கு ஆங்கிலம் மிக நன்றாகத் தெரியும். ஆங்கிலத்திலேயே பதில் சொல்லுங்கள். இந்தியில் எதற்குச் சொல்கிறீர்கள்?” என வலியுறுத்தினார். இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “மொழிபெயர்ப்பு வசதி இருக்கிறதே!” எனச் சமாளித்தபடி பேசினார்.

இதன் பிறகும் விடாத கனிமொழி, “கேள்வி கேட்ட எனக்கு உங்கள் பதில் புரியும் வகையில் ஆங்கிலத்திலேயே பதில் கூறுங்களேன்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்குச் செவிசாய்த்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “சகோதரி கனிமொழியை நான் மதிக்கிறேன். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறேன்” என்ற விளக்கத்துடன் பேசத் தொடங்கினார். “புலம்பெயர்ந்த மக்களுக்கான ரேஷன் பொருட்களுக்கான செலவை நூறு சதவீதம் மத்திய அரசே ஏற்கும்” என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து மக்களவையில் அமர்ந்திருந்த உறுப்பினர்கள், இந்நிகழ்ச்சியைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இதனால், சில நிமிடங்கள் மக்களவையில் லேசான சலசலப்பு கிளம்பியது. இந்தியில் பேசத் தொடங்கிய மத்திய அமைச்சரை ஆங்கிலத்தில் பதிலளிக்க வைத்த கனிமொழியை சக உறுப்பினர்கள் பாராட்டினார்கள். இதற்குமுன், கடந்த பட்ஜெட் கூட்டத்தில் திமுகவின் எம்.பி-யான கணேசமூர்த்தி, பியூஷ் கோயலிடம் ஒரு துணைக் கேள்வி கேட்டிருந்தார். அப்போது அவர் தன் வினாவைத் தமிழில் எழுப்பினார்.

கணேசமூர்த்தியின் கேள்விக்கு பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்தார். தமக்கான பதிலை ஆங்கிலத்தில் அளிக்குமாறு கணேசமூர்த்தி கேட்டதை பியூஷ் கோயல் ஏற்கவில்லை. மக்களவையில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசலாம் என்பதால், தான் இந்தியில் பதிலளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்தி அறியாதவர்கள் மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும்படியும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.