கல்லூரி மாணவி கூட்டு பாலியல்: முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

கல்லூரி மாணவி கூட்டு பாலியல்: முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கத்தி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த பகுதிகளில் செயின் பறிப்பு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை கட்டுபடுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், `காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் நகரம், வாலஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் இப்பகுதியில் செயல்படும் நிறுவனங்களில் இரவு - பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் ஆளில்லாத இடங்களில் சமூகவிரோதிகள் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப் பொருட்களை உட்கொண்டு அப்பகுதியில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு மற்றும் கத்தியைக் காட்டி இளம் பெண்களை பாலியல் சீண்டல் செய்வது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற குற்றச் செயல்கள் அதிகம் செய்து வருகின்றனர்.  இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூகவிரோத சக்திகளின் குற்றச் செயல்களை தடுப்பதற்கும், சட்டவிரோத போதைப் பொருட்களை தடை செய்வதற்கும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பற்றாக்குறையாக உள்ள காவலர்கள் இடத்தை உடன் பூர்த்தி செய்திடவும், காஞ்சிபுரம் நகரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்களில் காவல்துறை இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்திட வேண்டும். சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடங்களில் புறக்காவல்நிலையங்களை கூடுதலாக்கிடுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in