காமராஜ் வீட்டில் சோதனை... கொந்தளிக்கும் ஈபிஎஸ்: கண்டுகொள்ளாத ஓபிஎஸ்

காமராஜ் வீட்டில் சோதனை... கொந்தளிக்கும் ஈபிஎஸ்: கண்டுகொள்ளாத ஓபிஎஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஈபிஎஸ். அதே நேரத்தில் ஓபிஎஸ் மவுனம் காத்து வருகிறார்.

அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மண்ணார்குடியில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 49 இடங்களில் காலை முதலே இந்த சோதனை நடந்து வருகிறது.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

இதே நேரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இது குறித்து எந்த கண்டனம் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார். காமராஜ் ஈபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓபிஎஸ் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிமுக தலைமைப் பதவியை யார் கைப்பற்றுவது என்ற ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in