காமராஜர் பிறந்தநாளை இப்படியும் கொண்டாடலாம்: நெகிழ வைத்த காங்கிரஸ் எம்எல்ஏ!

காமராஜர் பிறந்தநாளை இப்படியும் கொண்டாடலாம்: நெகிழ வைத்த  காங்கிரஸ் எம்எல்ஏ!

காமராஜர் பிறந்தநாள் நேற்று வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களையும் கடந்து தமிழகம் முழுவதுமே காமராஜர் பிறந்தநாள் விழாவை பல்வேறு அமைப்பினரும் கொண்டாடினர்.

இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளைக் கொண்டாடும்வகையில் கிள்ளியூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் இன்று செய்த செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான காமராஜரின் எளிமை இன்றைய தலைமுறையினருக்கும் முன்மாதிரி என்றால் மிகையாகாது. காமராஜருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவில் பற்றாளர்கள் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிமாவட்டம் தாய் தமிழகத்தோடு இணையப் பாடுபட்ட மார்ஷல் நேசமணியின் மறைவுக்குப் பின்பு 1969-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராஜர் வாகை சூடினார்.

அவரது சொந்த ஊரான விருதுநகர் கைவிட்ட போதும் குமரிமக்கள் காமராஜரை கைவிடவில்லை. அவர் முதல்வராக இருந்தபோதும், எம்.பியாக இருந்தபோதும் குமரிமாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்தவர் ஆவார். காமராஜர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்தநாளைக் காங்கிரஸ் கட்சியினரும் வெகுவிமர்சையாகக் கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் காமராஜர் பிறந்தநாளைக் கொண்டாடும்வகையில் தன் தொகுதிக்குட்பட்ட கீழ்குளம் பேரூராட்சியின் விழுந்தயம்பலம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்தத் தொண்டரும், சொந்த வீடில்லாமல் தவித்தவருமான சுகுமாறன் என்பவருக்கு தன் சொந்த செலவில் வீடுகட்டிக் கொடுத்துள்ளார். காமராஜர் இல்லம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சாவியை ஒப்படைத்தார்.

ஆளுயர மாலை, பிரம்மாண்ட கட் அவுட், ஊரைச் சுற்றி விளம்பர போஸ்டர் என பிறந்தநாளைக் கொண்டாடாமல் ஏழைத் தொண்டனுக்கு வீடுகட்டிக்கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமாரின் செயல் காங்கிரஸ் கட்சியினரை நெகிழச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in