
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சர்ச்சை பேட்டிகளுக்கு பெயர் பெற்ற ஆர்.எஸ்.ராஜன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில், “நடிகர் கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்லாது, பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஊழல் எதிர்ப்பு, நேர்மையான அரசு, மதச்சார்பற்ற கொள்கை, மனிதத்துவம் ஆகியவற்றை மக்களிடம் வலியுறுத்தி அரசியல் பயணத்தில் பயணித்து வரும் கமல்ஹாசன் இதுவரை சந்தித்த அனைத்து தேர்தல்களையும் தனியாகவே சந்தித்து மக்கள் மன்றத்தில் நின்றவர்.
இந்த கொள்கைகளை வலியுறுத்தியே ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டது. தொடர்ந்து பாடுபட்டும் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அடிநாதமே மதசார்பின்மைதான். இந்தியா உலக அரங்கில் முன்னேறிச் செல்ல வேண்டுமெனில், இளைஞர்களின் நல்ல வழிகாட்டியான இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதை நடிகர் கமல்ஹாசனும் புரிந்து கொண்டு உள்ளார்.
இதை அவரது சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு தெளிவாக புரிய வைத்து வருகிறது. இந்த நிலையில், தேச ஒற்றுமை யாத்திரையில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பதாக அறிவித்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இது அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ராகுல் காந்தியுடன் இணைந்து கமல்ஹாசனும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்-க்கு பிறகு திரை உலகத்திலிருந்து கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தவர்கள் யாரும் இல்லை. இதை கள அனுபவமாக அறிந்த நடிகர்கள் பலர் உண்டு. இதனை கமல்ஹாசனும் அறிந்திருப்பார்.
எனவே அவர் நடத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியை கலைத்து விட்டு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தியாவின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மை கொள்கை வெற்றி பெறவும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். திரை உலகில் பல புதுமைகள் படைத்த நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்தியாவிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.