காங்கிரஸ் பீட்டில் கமல்... பாஜக ரூட்டில் ரஜினி?

ராகுல் யாத்திரையும்... கமலின் அரசியல் கணக்கும்!
காங்கிரஸ் பீட்டில் கமல்... பாஜக ரூட்டில் ரஜினி?

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் என்ன திட்டத்துடன் இணைந்தார் என்பதுதான் தமிழக அரசியலில் இப்போது ஹாட் டாபிக்.

அரசியல் துறவறம் என்று சொல்லிவிட்ட ரஜினியை இன்னமும்கூட விட்டுக் கொடுக்காமல் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில், அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் கூட்டணியில் கமல் கைகோப்பார் என்ற செய்தி தமிழக அரசியலில் அர்த்தமுடன் விவாதிக்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா என பல மாநிலங்களில் பயணித்த இந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக டெல்லியில் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் யாத்திரையில் இணைந்தார். 2019 மக்களவை மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட கமல்ஹாசன், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணிக்கு திட்டமிடுகிறாரா என்ற விவாதம் இப்போது கிளப்பி இருக்கிறது.

கமல்ஹாசனின் மய்ய பாதை!

2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் மிக பிரம்மாண்ட கூட்டம் கூட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். அந்த விழாவில் அர்விந்த் கேஜ்ரிவால் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 மக்களவைத் தேர்தலில் சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட மநீம, 3.78 சதவீத வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்தது. அதே தேர்தலில் அந்தமானில் மக்கள் நீதி மய்யத்துடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

இதைத் தொடர்ந்து 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது மக்கள் நீதி மய்யம். அந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சுமார் 140 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இம்முறை மநீமவின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்தது. கமல்ஹாசன் உட்பட அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தனர். வாக்கு சதவீதமும் 2.62% ஆக குறைந்தது.

இதன் பின்னர் மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த மகேந்திரன், சந்தோஷ்பாபு, பத்மபிரியா, வீரசக்தி உள்ளிட்ட பலரும் கட்சியிலிருந்து விலகினர். கமல்ஹாசனுமே கடும் அப்செட்டில் இருந்தார். இதையடுத்து அரசியலுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்துவிட்டு அரிதாரம் பூசக் கிளம்பிய கமலுக்கு ’விக்ரம்’ படத்தின் வெற்றி பெரும் எனர்ஜியைக் கொடுத்தது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியதால், இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. ஒருவேளை, இது திமுக - மநீம கூட்டணிக்கான தொடக்கமா என்றுகூட அப்போதே பேசப்பட்டது.

2021 தேர்தலில் கூட்டணி விஷயத்தில் சொதப்பியதே மிகப்பெரிய சறுக்கலுக்குக் காரணம் என்று, மய்யத்தின் நிர்வாகிகள் பலரும் பல்வேறு சமயங்களில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர். எனவே, அதே தவறு மீண்டும் நடக்காத வகையில் 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிக் கணக்கை காட்டியே ஆகவேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறார் கமல். அதற்காக அண்மையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டியது மநீம. அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் தான் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் கலந்துகொள்வார் என்ற அறிவிப்பும் வெளியானது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு வலுவான கூட்டணியில் இடம்பெற கமல்ஹாசன் தயாராகிவிட்டது உறுதியாகிறது.

2019, 2021 தேர்தல்களில் இருந்தது போன்ற வரவேற்பு தற்போது கமல்ஹாசனுக்கு இல்லை. அதனால் வலுவான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே வெற்றிக் கணக்கைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கமல். இன்னொரு பக்கம், கமல்ஹாசன் பாஜகவின் ‘பி டீம்’ என்ற விமர்சனத்தை சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. அந்த விமர்சனத்தை உடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கமல், அதற்காகவும் ராகுலுடன் ’கை’ கோத்திருக்கிறார்.

ஆனாலும், “பாஜகவால் இந்தியாவின் ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படை சித்தாந்தத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காகவே ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று, கமல் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அந்த சமயத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்” என மய்யத்தின் நிர்வாகி செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

ரஜினியை விடாது துரத்தும் பாஜக!

“வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த ரஜினி, ”இனி எப்போதும் வரமாட்டேன்” என அரசியலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போட்டுவிட்டார். இதனால், அவரை அரசியலுக்குள் இழுத்துப்போட்டு ஆதாயம் பார்க்க நினைத்த பாஜகவின் அத்தனை முயற்சிகளும் வீணாகிப் போயின. ஆனாலும், வேதாளம் - விக்கிரமாதித்தன் கதையாக எந்த வகையிலாவது ரஜினியையோ அல்லது அவரது லைம்லைட்டையோ தனது அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்தியே ஆக வேண்டும் என இன்னமும் விடாமல் முயற்சிக்கிறது பாஜக.

ரஜினியும் அவ்வப்போது இந்த வலையில் போய் தானாக சிக்கிக்கொண்டு, தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்கிறார். அப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஆளுநரை சந்தித்த ரஜினி, “நாங்கள் அரசியல் பேசினோம்” எனச் சொல்லி பரபரப்பை பற்றவைத்தார். “ஆளுநரிடம் அரசியல் பேச ரஜினிக்கு என்ன வேலை?” என சில அரசியல் கட்சிகளும், “ஆளுநரிடம் ரஜினி அரசியல் பேசியதில் என்ன தவறு?” என பாஜகவும் முட்டிமோதியதில் அரசியல் அரங்கமே அதிர்ந்தது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. எதாவது ஒரு வகையில் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க வேண்டுமென்பதே பாஜகவின் திட்டம். ஒருவேளை, அது கைகொடுக்கவில்லை என்றால், உயர் விருதுகள், ஆளுநர் பதவி போன்ற கவுரவங்களை கொடுத்தாவது ரஜினியைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது பாஜக. அதிமுக சிதறிக் கிடக்கிறது. அதில் ஒருவரைப் பிடித்தால் மற்றொருவர் முறுக்குகிறார். எனவே அதிமுகவால் முழுமையான பலன் கிடைப்பது சந்தேகமே. அதுபோல மற்ற உதிரிக் கட்சிகள் அனைத்தையும் கூட்டணியில் இணைத்தாலும்கூட மக்களவைத் தேர்தலில் வெற்றிக்கணக்கை தொடங்குவது சிரமம் என நினைக்கிறது பாஜக. அதனால் தான் ரஜினிக்கு இன்னமும் தூது விடுகிறது அந்தக்கட்சி.

இப்படி நாலா பக்கமும் ரஜினிக்கான பொறிகளை பாஜக தயார் செய்துக்கொண்டிருக்கும் நிலையில்தான், அவருக்குப் போட்டியாக கமல்ஹாசன் காங்கிரஸோடு கைகோத்திருக்கிறார். “நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்” என கமலும் ரஜினியும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியலானது இருவரையும் இருவேறு துருவங்களை நோக்கித் தள்ளுகிறது.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக என கூட்டணி ஸ்திரமாகவே உள்ளது. இக்கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் கமல் சுமூகமான உறவில்தான் உள்ளார். எனவே, அவர் இக்கூட்டணியில் இணைவதில் சிக்கல் எதுவும் ஏற்படாது. தனித்துப் போட்டி என்பது சரிப்பட்டு வராது என்று 2021-லேயே கமல் முடிவுசெய்துவிட்டார். தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வரும் கமலுக்கு காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆக, “காங்கிரஸ் கூட்டணியில் கமல் இருக்கிறார். நீங்கள் பாஜகவுக்கு வந்துவிடுங்கள்” என ரஜினியை தங்கள் பக்கம் நோக்கி இழுக்க பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நல்ல நண்பர்கள் இருவரும் அரசியல் மேடையில் எதிரும் புதிருமாக நின்றால் தமிழகத்தில் மீண்டும் கருணாநிதி - எம்ஜிஆர் அரசியல் களைகட்டும் தான். ஆனால், அது நடக்குமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in