காங்கிரஸ் தொகுதிகளை புறக்கணித்த கமல்... ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் அறச்சீற்றம்!

காங்கிரஸ் தொகுதிகளை புறக்கணித்த கமல்... ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் அறச்சீற்றம்!

திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறார். ஆனால், அதில் ஓரிடத்தில்கூட காங்கிரஸ் வேட்பாளருக்காக அவர் பிரச்சாரம் செய்யவில்லை, செய்யவும் போவதில்லை. இது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுகவுக்கு பிரச்சாரம்
மதிமுகவுக்கு பிரச்சாரம்

மார்ச் 29-ம் தேதி தொடங்கிய கமல்ஹாசனின் பிரச்சாரப்பயணம் ஏப்ரல் 16 வரை தொடர்கிறது. ஈரோட்டில் தொடங்கிய அவரது பிரச்சாரப் பயணம்  சேலம்,  திருச்சி, சிதம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர், சென்னை,  மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி  ஆகிய தொகுதிகள் வழியே பயணிக்கிறது. கமல் பிரச்சாரம்  மேற்கொள்ளும் இந்த தொகுதிகளில் ஒரு தொகுதிகூட காங்கிரஸ் போட்டியிடும்  தொகுதி இல்லை.

திமுக  கூட்டணியில்  உள்ள  சிறிய கட்சிகளான  விசிக , மதிமுக,    கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை போட்டியிடும் தொகுதிகளுக்கெல்லாம் செல்லும் கமல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் பத்து தொகுதிகளில் ஒன்றில்கூட பிரச்சாரப் பயணத்தை திட்டமிடாதது தமிழக அரசியலில் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது.

திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம்
திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம்

திமுக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய ஈரோட்டுக்கும் சேலத்திற்கும் சென்ற கமல், அருகிலேயே இருக்கும் காங்கிரஸ் போட்டியிடும் கரூருக்குச் செல்லவில்லை.  விசிக போட்டியிடும் சிதம்பரத்துக்குச் சென்றவர் அருகில்  காங்கிரஸ்  போட்டியிடும் மயிலாடுதுறைக்குச்  செல்லவில்லை.   திமுக போட்டியிடும் சென்னை மற்றும்  ஸ்ரீபெரும்புதூரில்  பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், அருகிலுள்ள காங்கிரஸ் தொகுதியான திருவள்ளூரைப் புறக்கணித்திருக்கிறார். 

இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் மிக நெருக்கமாக பழகியவர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தவர். அதோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றவர் கமல். மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியேற்பு விழாவின்போதும் அழைக்கப்பட்டவர். 

காங்கிரசுடன் கமல் இவ்வளவு நெருக்கம் காட்டுவதால் இந்த மக்களவைத் தேர்தலில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 சீட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. திமுக நேரடியாக சீட் ஒதுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட வாய்ப்பிருப்பதாகப் பேசப்பட்டது.

காங்கிரசுக்கு வழங்கப்படும் தொகுதிகளிலிருந்து  கமலுக்கான தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்  என்று திமுக தொடர்ந்து காங்கிரசிடம் கூறிவந்தது. அதனால்  கடைசிவரை கமல்ஹாசனை அழைத்து திமுக நேரடியாக பேச்சு நடத்தாமல் இருந்தது. காங்கிரசுக்கு  ஏழு தொகுதிகளை மட்டும் ஒதுக்க முன்வந்த திமுக, இறுதியில் புதுச்சேரியையும் சேர்த்து பத்துக்கு சம்மதித்தது. அதில் கமல்ஹாசனுக்கு இரண்டு தொகுதிகளை வழங்க  வேண்டும் என்று  திமுக கூறியிருந்ததாக அப்போது பேசப்பட்டது. அதன்படி கோவை, தென்சென்னை தொகுதிகள் மய்யத்துக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இந்தத் தகவல் கமலுக்கும் சொல்லப்பட்டதால் அவரும்  அழுத்தம் கொடுக்காமல் அமைதிகாத்து வந்தார். ஆனால்,  காங்கிரசுக்குள் ஏற்பட்ட முட்டல் மோதல்களால்  அவர்களுக்கே 10 இடங்கள்  போதாது என்ற நிலை ஏற்பட்டதால் கமலை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக்  கூறப்படுகிறது. இதனால் வேறுவழியில்லாமல், திமுக கமல்ஹாசனை அழைத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக ஒப்பந்தம் செய்தது.

காங்கிரசுக்காக அகில இந்திய  அளவில்  குரல்  கொடுத்தவர் களில் கமல்ஹாசனும் ஒருவர்.  பகிங்கரமாக பாஜகவை அவர்  எதிர்த்தது காங்கிரசுக்கு வலு  சேர்த்தது. காங்கிரஸ் இந்தக்  கூட்டணியில் இருக்கிறது  என்பதால்தான் அவர்  தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் இணைந்தார்.  அப்படி  நம்பியவரை காங்கிரஸ் கைவிட்டதால்  காங்கிரஸ் மீது  கடும்  வெறுப்பாகிப் போனார். 

திருமாவளவனுக்காக கமல் பிரச்சாரம்
திருமாவளவனுக்காக கமல் பிரச்சாரம்

’காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் ஒன்று எங்களுக்கு வந்திருக்க வேண்டும். இதை அவர்களாகவே எங்களுக்கு குறைந்தபட்சம் செய்திருக்க வேண்டும்’ என மநீம நிர்வாகி வினோதினி வைத்தியநாதன் சமூக வலைதளத்தில் வெளிப்படையாகவே எழுதியிருந்தார். 

காங்கிரஸ் கட்சியாவது தங்களுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும் என கமலிடமே நிர்வாகிகள் சிலர் புலம்பியுள்ளனர். இதெல்லாம் கமலுக்கும் அவரது கட்சியினருக்கும் காங்கிரஸ் மீது வெறுப்பை உண்டாக்கியது. அந்த வெறுப்பில் தான் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதை கமல் திட்டமிட்டு தவிர்த்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பிராச்சார பயணம் தொடங்குவதற்கு முன்பாக திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசிய கமல், சத்தியமூர்த்திபவன் பக்கம் போகாமல் தவிர்த்தார்.

”மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்று பிரச்சார  பயணத்தை தொடங்கும்போது கமல்ஹாசன் சொன்னது அவரது மனதில் காங்கிரசுக்கு எதிராக இருக்கும் மனப்புழுக்கத்தில் வந்த வார்த்தைகள் தான் என்கின்றனர் மக்கள் நீதி மய்யத்தினர். கமலின் இந்தக் கோபத்தை உணர்ந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அவரை நேரில் சந்தித்து, காங்கிரஸ் தொகுதிகளுக்கும் அவர் பிரச்சாரம்  செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். 

ஆனாலும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்  இதுவரையிலும்   அதற்கான ஒப்புதல் தெரிவிக்கவில்லை. அவரின் பிரச்சார சுற்றுப் பயணத் திட்டத்திலும் எந்த மாறுதலும் அறிவிக்கவில்லை.  ஆனாலும், காங்கிரஸ் தரப்பில் அவரை சமாதானப்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசைந்து கொடுப்பாரா ஆண்டவர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in