மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் அவரது கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து கட்சி போட்டியிடுவோம் என கமல் ஹாசன் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையுடன் அவர் இணக்கமாக இருந்து வரும் நிலையில் அந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் தொடக்க நாளான பிப்.21-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார். இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "தாய்மொழி தினத்தில் (பிப்.21) பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதைச் சொல்லும். நாடாளுமன்றத்தில் நம்மவர்" என்று கூறப்பட்டிருந்தது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது எனச் சொல்லப்படும் நிலையில், கமல் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுவார் என்றும், அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடத்தில் கை சின்னத்தில் கமல் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே, அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, " 'தக் லைப்' படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். மக்களவைத் தேர்தல் பணிகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி குறித்த தகவல்களை இரண்டு நாட்களில் சொல்கிறேன்." என்று தெரிவித்தார்.