மகளிருக்கு 1000 ரூபாய்; முதலில் சொன்னது நாங்கள்தான்!

தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன் பேச்சு
மகளிருக்கு 1000 ரூபாய்; முதலில் சொன்னது நாங்கள்தான்!
மதுரையில் பிரச்சாரம்...

மதுரை மாநகரில் ‘மக்கள் நீதி மய்யம்’ சார்பில் 98 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து நேற்றிரவு அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“கடந்த காலங்களில் தெருவில் வளர்ந்த குழந்தைகள் எந்தவித ஆபத்தும், நோயும் இல்லாமல் வளர்ந்தனர். அந்தக் குழந்தைகளில் ஒருவன்தான் நான். இன்று அப்படிக் குழந்தைகளை விட முடியுமா? காரணம், சுகாதாரம் பாதுகாக்கப்படவில்லை. மதுரை மாநகராட்சிக்கு வருடந்தோறும் 586 கோடி ரூபாய் செலவிட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கான சாயல் எங்காவது தெரிகிறதா என்று பார்த்தேன். இல்லவே இல்லை. அனைத்து தெருக்களிலும் சாக்கடை ஓடுகிறது. சாலைகள் பெயர்ந்து கிடக்கின்றன. தெருவில் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஆபத்தில்லாமலும் விளையாட வேண்டும் என்றால் எங்களுக்கு வாக்களியுங்கள். அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்த வந்த கட்சிதான், மக்கள் நீதி மய்யம்.

ஜனநாயகத்தை மக்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான பலமான ஆயுதம்தான் ஓட்டு. அதை பண்டமாற்று வியாபாரமாக்கிவிடாதீர்கள். 1 கோடி ரூபாய் செலவு செய்து கவுன்சிலர் ஆகிறவர், பதவிக்கு வந்த பின்னர் அந்த கோடியை எடுக்காமல் விடுவாரா? எனவே, பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.

நாங்கதான், முதன்முதல்ல இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற சொல்லை உச்சரிக்க ஆரம்பித்தவர்கள். இந்த மாதிரி ஒன்றைச் செய்யலாம் என்ற திட்டத்தைச் சொன்னதே, மக்கள் நீதி மய்யம்தான். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அதை வேகமாக தங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தந்தார்களா? இல்லத்தரசிகளைப் பார்த்துக் கேட்கிறேன், நீங்கள் எல்லாம் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கிவிட்டீர்களா? என்ன ஆச்சு? ஓட்டை காசுக்கு விற்றீர்கள் என்றால் இந்த கதிதான் ஆகும்”.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.