மலம் கலந்த குடிநீரை குடித்த சிறுமிக்கு சிகிச்சை: தாயாரிடம் செல்போனில் பேசிய கமல்ஹாசன் ஆறுதல்!

மலம் கலந்த குடிநீரை குடித்த சிறுமிக்கு சிகிச்சை: தாயாரிடம் செல்போனில் பேசிய கமல்ஹாசன் ஆறுதல்!

மலம் கலந்த குடிநீர் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாயாரிடம் செல்போனில் பேசிய மக்கள் நீதிமன்றம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக் கழிவுகள் கலந்துள்ளனர். இந்த தண்ணீரை குடித்த பலருக்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் பாதிக்கப்பட்ட கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்குள்ள அய்யனார் கோயிலில் தங்களை வழிபட அனுமதிக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, பொதுமக்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபட வைத்தார் ஆட்சியர் கவிதா.

இந்த நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, தீண்டாமை கொடுமை காரணமாக இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் (35), இரட்டைக் குவளை முறையை கடைபிடித்து வந்த இறையூரைச் சேர்ந்த மூக்கையா (57) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தீண்டாமையை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டியிருந்தது.

இந்த நிலையில் மலம் கலந்த குடிநீரை குடித்த சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாயார் ராஜா ரத்தினத்திடம் தொலைபேசியில் பேசிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இந்த சமுதாயத்தில் நிலவும் அவலங்கள் குறித்து வேதனை தெரிவித்ததோடு, அந்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். கோயிலுக்கு செல்வது நல்ல விஷயம் தான் என்று கூறிய கமல்ஹாசன், அதைவிட பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த தைரியத்தை பாராட்டுவதாக கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை குறித்தும் விசாரித்த கமல்ஹாசன், அப்பகுதியில் சுத்தமான குடிநீர் நிரந்தரமாக வழங்க ஏற்பாடு செய்வதாக அப்போது உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in