கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியை சேதப்படுத்திய வழக்கில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவம் காரணமாக அந்த தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் பள்ளி வகுப்பறைகள் சூறையாடப்பட்டன. பள்ளி பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் தமிழக அரசு கலவரத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வன்முறை தொடர்பாகப் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பாக கரூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர் அணி அமைப்பினரைச் சேர்ந்த நான்கு பேரை பசுபதிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். கலவரத்தைத் தூண்டுதல், கூட்டுச் சதி, அரசிற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா போராட்டத்தை நடத்தவோ தூண்டவோ கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து அவர்களை ஜாமீனில் விடுவித்தார்.