கள்ளக்குறிச்சி மாணவி மரணம் … தவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் … தவறு யார் செய்திருந்தாலும்  பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் தவறு யார் செய்திருந்தாலும் பராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், " தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம் தொடர்பாக ஒவ்வொரு அமைப்புகளும் ஒவ்வொரு மாதிரி கூறி வருகின்றனர். எங்களைப் பொருத்தவரை, பள்ளிக்கல்வித்துறை அனுமதி இல்லாமல் தனியார் பள்ளிகள் விடுமுறையெல்லாம் விடக்கூடாது. மாணவர்களின் நலனை கருதியே இதை கூறுகிறோம்.

கள்ளக்குறிச்சியைப் பொருத்தவரை, தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஏற்கெனவே கூறியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு நான் இன்று நேரில் செல்கிறேன்” என்றார்.

மேலும்,” பொதுவாகவே மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டியுள்ளது. முதல்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதை அறிவித்திருந்தார். குழந்தைகள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதையும் மீறி தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. விசாரணைக்குப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக்கல்வித்துறை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர், அதிகாரிகள் அனைவரையும் உடன்வருமாறு சொல்லியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களைச் சேர்க்கைக்கு அனுமதிப்பதற்காக சின்னசேலம் அருகில் இருக்கும் முதன்மைக் கல்வி அலுவலரிடம், அருகில் இருக்கும் அரசுப்பள்ளிகள் என்னென்ன உள்ளதென்று பார்க்க கூறியிருக்கிறேன். அந்த பள்ளியின் சேதாரத்தைப் பார்க்கும்போது, அந்தப் பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

அதே நேரத்தில், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் சிபிசிஐடி விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த தீர்ப்பு எப்படி வந்தாலும், நிச்சயமாக அவர்களுக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in