`கள்ளக்குறிச்சி மாணவி கொலையா? தற்கொலையான்னு தெரியணும்'- நீதி விசாரணை கேட்கும் பிரேமலதா

`கள்ளக்குறிச்சி மாணவி கொலையா? தற்கொலையான்னு தெரியணும்'- நீதி விசாரணை கேட்கும் பிரேமலதா

``கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கொலையா? தற்கொலையா? என விசாரணை செய்ய வேண்டும்'' என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரையில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக தேமுதிக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "அத்தியாவசிய பொருட்களின் விலையையும், மின் கட்டணத்தையும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போகிறது. ஏற்கெனவே, ஜிஎஸ்டி உள்ள நிலையில், மக்கள் அதிகமான வரியை செலுத்தி வருகின்றனர். மக்கள் வருமானத்திற்கு என்ன வழி என்று அரசாங்கம் யோசிக்க வேண்டும். அரசாங்கம் என்பது மக்களுக்காக தான்" என்றார்.

தொடர்ந்து, பேசிய அவர் "கரோனாவில் இருந்து மக்கள் மீளாமல் உள்ளனர். ஆனால், அரசாங்கத்திற்கு மட்டும் வருமானம் வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பது தவறு. பேக் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இதற்காக தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கான அரசாக இருந்தால் அது வரவேற்கக் கூடிய விஷயமாக இருக்கும். கேப்டன் விஜயகாந்த் கூறியது போல் இந்த விலைவாசி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்" என்றார்.

பள்ளி மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தற்போது, ஸ்ரீமதி என்கின்ற பெண் இறந்தது அனைவருக்கும் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண் புதைக்கப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மாணவிகளின் தற்கொலை தொடர்ந்து வருகிறது. இந்தப் பிரச்சனை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் போதாது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அந்த மாணவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in