நாம் தமிழர் கட்சியின் சின்னமே சீமான் தான்... மயிலாடுதுறை வேட்பாளர் காளியம்மாள் தடாலடி!

சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்த காளியம்மாள்.
சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்த காளியம்மாள்.

எங்களுக்கு சின்னம் முக்கியமில்லை, எங்கள் சின்னமே எங்கள் அண்ணன் சீமான் தான் என்று நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் நேற்று மாலை சீர்காழியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். சீர்காழி நகரப் பகுதியில் அமைந்துள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மாலையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, "மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நான் போட்டியிடுகிறேன். சிறு வயது முதல் இந்த மண்ணில் பல்வேறு  பொதுமக்கள் பிரச்சினைகளைப் பார்த்து வருகிறேன். இந்த மண்ணில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற அதிமுக, காங்கிரஸ், திமுக கட்சியைச் சேர்ந்தவர்களால்  இந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. 

காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன்,  ஆகிய பிரச்சினைகளுக்கு இவர்கள் நாடாளுமன்றத்தில் பேசப் போவதில்லை. அதனால் நம் பிரச்சனைக்கு நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் என மக்களில்  ஒருவராக சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். 

சீமான்
சீமான்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இந்த அரசு கொடுக்கவில்லை. வளம் சார்ந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனை நெறிப்படுத்தினாலே இப்பகுதியில் பொருளாதார பிரச்சினை, விவசாய பிரச்சினை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படும். பெண்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும். கடற்கரை பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 4.5 லட்சம் ஹெக்டர் கடல் பரப்பை விற்று விட்டதாக  கூறுகிறார்கள். 

இதுகுறித்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பேசவில்லை. காவிரியில் குறுக்கே அணைக் கட்டுவோம் என கர்நாடக  எம்.பி. கூறுகிறார். ஆனால், திமுக எம்.பிக்கள் 39 பேரும் இது குறித்து பேசவில்லை. தேர்தலில் 6.7 சதவீத வாக்கு வாங்கியுள்ள நாம் தமிழர் கட்சி, கூடுதலாக 1.3 சதவீதம் வாங்கி இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறக் கூடிய ஒரு கட்சி,  ஐந்து தேர்தல்களை எதிர் கொண்டுள்ளது. இரண்டு தேர்தல்களை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தைக் கொடுத்த தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு ஏன் பாரபட்சம் காட்டுகிறது.  

காளியம்மாள்
காளியம்மாள்

பாஜக திட்டமிட்டு  தேர்தல் ஆணையம் மூலம் சின்னத்தை முடக்கி வைத்துள்ளனர். ஈ.டி ரெய்டு  நடத்தி மிரட்டி பார்த்தனர். தற்போது சின்னத்தை முடக்கி வைத்துள்ளனர். விவசாயி சார்ந்த பிரச்சினைகள், மக்கள் பிரச்சனைகளை பேசி தமிழகத்தில்  மூன்றாவது இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜக, தமிழகத்தில் தான் பெரிய கட்சியாக மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக நான்காவது இடத்தில் இருந்து முன்னேறுவதற்காக  இவ்வாறு திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளது. 

மக்களவைத் தேர்தல்,  சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை ஒரு சின்னத்தில் நாங்கள் அணுகியுள்ளோம். ஆனால்  இரண்டு வருடங்களேயான ஒரு கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கி உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு குறைவான கர்நாடகத்தில் உள்ள ஒரு லெட்டர்பேடு கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கி உள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததாக கூறும் தேர்தல் ஆணையம்  எத்தனை நிமிடங்கள் முன்னுரிமை என வெளிப்படையாக கூற வேண்டும். 

முதலில் எங்களுக்கு சின்னத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆண்டாண்டு காலமாக உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களை வைத்து மக்களை திசை திருப்பி வைத்திருந்ததோடு, இது நல்ல கட்சியா, நல்ல வேட்பாளரா , மக்களுக்கு நன்மை  செய்வார்களா என எதுவும் பார்க்காமல் சின்னம் தான் பிரதானம் என வைத்திருந்தனர்.  

எங்களுக்கு சின்னமே எங்கள் அண்ணன் சீமான் தான். தேர்தல் ஆணையம் கூறியது போல் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டு விவசாயிக்கு பாதுகாப்பாக உள்ள நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் இயற்கையாகவே கிடைத்திருந்தது. அதனை பாஜக அபகரித்து  வைத்துக் கொண்டுள்ளது. சீப்பை மறைத்தால் கல்யாணம் நின்று விடும் என நினைக்கிறார்கள்.  எங்களுடைய சின்னம் எங்களுடைய அடையாளமாக எங்களுடைய தலைவர்  உள்ளார். 

இரண்டு மணி நேரம் போதும். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை  மக்களிடம் நாங்கள் கொண்டு செல்வோம்" என்று காளியம்மாள் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in