
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து ரூபாய் வராத பெண்கள் தாலுக்கா அலுவலகங்களில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை வசைப்பாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் நிலைக் குறித்து அறிய ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனை சமாளிக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர். ஒரு சில ஊழியர்கள் பொதுமக்களை ஒருமையில் பேசியுள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.