திருச்சி சிவா வீட்டைத் தாக்கியவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்: இரவோடு இரவாக சிறையிலடைப்பு

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் காஜாமலை விஜய் உள்ளிட்டவர்கள்
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் காஜாமலை விஜய் உள்ளிட்டவர்கள் திருச்சி சிவா வீட்டைத் தாக்கியவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்: இரவோடு இரவாக சிறையிலடைப்பு

திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்திய  சம்பவத்தில் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி கண்டோன்மெண்ட் ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலனியில்  நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  கட்டப்பட்ட இறகுப்பந்து மைதானத்தை  அமைச்சர் நேரு நேற்று  திறந்து வைத்தார். அப்போது இந்த திறப்பு விழா கல்வெட்டில் எம்.பி.சிவா பெயர் சேர்ப்பது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அமைச்சர் நேருவுக்கு கருப்புக்கொடி காட்டினர். இச்சம்பவத்தை தொடர்ந்து எம்.பி.சிவா வீட்டில் புகுந்து  அமைச்சர் நேருவின்  ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.  இதில் கார், இருசக்கர வாகனம், மின்சார விளக்குகள்  அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த சிவாவின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்ட நிலையில் அவர்களை போலீஸார் அழைத்துச் சென்று  செசன்ஸ் கோர்ட்  காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

ஆனால் அங்கும் அந்த நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து அவர்களைக் கடுமையாகத் தாக்கினர்.  இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீஸார் இரு தரப்பிலும் அளித்த புகாரின் பேரில் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், திமுக துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான முத்துச்செல்வம், அந்தநல்லூர் ஒன்றிய தலைவரும், மாவட்ட பொருளாளருமான துரைராஜ், 55வது வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ராம்தாஸ் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார். 

இதையடுத்து தலைமையின் உத்தரவுப்படி சிவா வீட்டை தாக்கியதாக காஜாமலை  விஜய் உள்ளிட்ட நால்வரும் போலீஸில் சரண் அடைந்தனர்.  திருப்பதி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.  இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு  நீதிபதியின் உத்தரவின்படி நேற்று இரவே சிறையில் அடைக்கப்பட்டனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in