முதல்வருக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குரு மகள்

சமூக நீதி போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டும் அறிவிப்புக்கு வரவேற்பு
முதல்வருக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குரு மகள்
விருதாம்பிகை

‘இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 21 பேருக்கும் விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்கு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தும், பாராட்டியும் வருகின்றனர். சட்டப்பேரவையிலேயே பாமக தரப்பில் ஜி.கே.மணியும், வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இட ஒதுக்கீடு போராட்டத்தில் மிகத்தீவிர களப்பணியாற்றிய காடுவெட்டி குரு தற்போது உயிரோடு இல்லாத நிலையில், அவரது மகள் விருதாம்பிகை மனோஜ் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதன்பின்னர் காமதேனு இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியவை, ’’1987-ல் வன்னியர்கள் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது, அன்றைய எம்.ஜி.ஆர். தலைமையில் இருந்த அதிமுக அரசு 21 பேரை துப்பாக்கிச்சூடு நடத்திக் கொன்றது. அதுமட்டுமல்லாமல் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தியது.

பிறகு, 1989-ம் ஆண்டு தமிழினக் காவலர் ‌மு.கருணாநிதியின் ஆட்சி அமைந்தவுடன் வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை சமூக நீதிப் போராட்டம் என்றுணர்ந்து, வன்னியர் சமூகத்துடன் சில சமூகங்களை இணைத்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். அவர் ஆட்சி செய்த அந்தக் காலக்கட்டத்தில் எந்தவித போராட்டமும் செய்யாதபோதே, அவர் தானாகவே இந்த இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல் உயிர்நீத்த தியாகிகள் 21 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் பண உதவி மற்றும் அந்த குடும்பங்களுக்கு ஓய்வு ஊதியம் ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.


இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க, அன்றைய திமுக அரசில் இருந்த வன்னியர் தலைவர்கள் மிகப்பெரும் பங்காற்றினார்கள். அப்போது கருணாநிதி, வன்னியர்களின் போராட்டம் சமூக நீதிப் போராட்டம் என்றறிந்து, வன்னியர்களின் உணர்வுகளைப் புரிந்து மனதார இந்த அனைத்து விஷயங்களையும் செய்தார். அதேபோன்று இப்பொழுது ஆட்சியில் அமர்ந்துள்ள அவரின் மகன் ஸ்டாலினும் வன்னியர் சமூக மக்கள் பின்தங்கி இருப்பதை உணர்ந்து, வன்னியர் மக்களின் நலனை உயர்த்த அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார்.

முதலமைச்சராக பதவியேற்ற உடன் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அமல்படுத்த அரசாணை வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாமல், தனது தந்தையின் வழியில் வன்னியர் போராட்டத்தை சமூக நீதி போராட்டம் என்று அங்கீகரித்து உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரத்தில் 4 கோடி செலவில் மணிமண்டபம் கட்டவும் ஆணையிட்டுள்ளார். மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விருதாம்பிகை அவரது கணவர் மனோஜ்
முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விருதாம்பிகை அவரது கணவர் மனோஜ்

7/10/2019 அன்று, ‘திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். சொன்னதை இப்போது செய்தும் காட்டியுள்ளார். இவ்வாறு, திமுக அரசு எப்பொழுது அமைந்தாலும் வன்னியர் மக்களின் நலனைக் கருதி அனைத்து செயல்களும் செய்யப்படுகிறது.

இதுபோன்று வன்னியர் நலனில் அக்கறை காட்டியும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பாடுபடும் திமுகவுக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் 3 கோடி வன்னியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல், இந்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் வெற்றிபெற உறுதுணையாக இருந்த எனது தந்தை உள்ளிட்ட அனைத்து வன்னிய தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விருதாம்பிகை கூறினார்.

Related Stories

No stories found.