`பாரிவேந்தர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'- காடுவெட்டி குரு மகள் காட்டம்

`பாரிவேந்தர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'-  காடுவெட்டி குரு மகள் காட்டம்
குரு விருதாம்பிகை

வார இதழ் ஒன்றுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் அளித்திருக்கும் பேட்டியில் வன்னியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டியிருக்கும் காடுவெட்டி குரு மகள் விருத்தாம்பிகை, அதற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் நம்மிடம் தெரிவிக்கையில், ``திரு. பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் ஒரு வார இதழுக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்தார். வன்னியர்களுக்கான 10.5 தனி உள் இட ஒதுக்கீட்டைப் பற்றிய அவரது கருத்தை கூறும்போது, நீதிமன்றம் சரியாகத்தான் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது என்று கூறியுள்ளார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அது அவரது கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் வன்னியர் குல சத்திரியர்கள் மீது வன்மத்தை கக்கும் விதமாக சில கருத்துக்களையும் அவர் கூறியிருக்கிறார். கை கால்கள் நன்றாகத்தான் உள்ளது, வன்னியர்கள் உழைத்துச்சாப்பிட வேண்டியதுதானே என்று அவதூறாக பேசியுள்ளார். நாங்கள் யாரும் அவரிடம் போய் இட ஒதுக்கீட்டை கேட்கவில்லை.

இந்திய அரசியலமைப்பு கொடுத்துள்ள உரிமைகளின்படிதான் அரசாங்கத்திடம் இட ஒதுக்கீட்டை கேட்கிறோம். அதில் அவருக்கு என்ன வந்தது? என்பதுதான் என்னுடைய கேள்வி. இந்தியாவில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து விட்டார்களா என்ன? இல்லை. இந்தியாவில் வன்னியர்கள் மட்டும் தான் இட ஒதுக்கீட்டை கேட்கிறார்களா?

உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்தபோது அவர் என்ன கோமாவிலா இருந்தார்? அப்பொழுது ஏன் உயர்சாதியினர் இட ஒதுக்கீடு பற்றி அவர் எந்த கருத்தையும் கூறவில்லை?. அதற்கு காரணம் எங்களுக்குத் தெரியும். எஸ்.ஆர்.எம் பல்கலை கல்வி குழுமத்தை உருவாக்கிய பொழுது பல ஏக்கர் நிலங்களை அவர் அபகரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரது கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன. வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இதனால் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு பிரச்சினையில் கருத்து கூறினால் அதனால் நமக்கு எதுவும் பிரச்சினை வருமோ என்று கருதி, அதில் எந்த கருத்தையும் அவர் கூறவில்லை.

அவருக்கு வன்னியர்கள் தலைவர்களில் யாரோ ஒருவரை தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றால் அந்த தனிப்பட்ட நபரின் மீது மட்டும் விமர்சனத்தை வைக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த மூன்று கோடி வன்னியர்களை இழிவுபடுத்துவது ஏற்புடையது அல்ல. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுவிட்டு தற்பொழுது அவரின் சுயநலத்திற்காக மோடி அவர்களை புகழ்ந்து கொண்டிருக்கிற அவர்தான் முதலில் உண்மையாக உழைத்து சாப்பிட வேண்டும்.

மோடி அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதை விட்டுவிட்டு இனியாவது உண்மையாக உழைத்து சாப்பிடுவது அவருக்கு நல்லது. அத்துடன் வன்னியர்கள் மீது கக்கிய வன்மத்திற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.