`வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துக்களை அபகரிக்கவே தமிழ் குமரனுக்கு பதவி'- குற்றம்சாட்டும் குருவின் மகள்

விருதாம்பிகை
விருதாம்பிகை

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு  தனது மகனை பாட்டாளி மக்கள் கட்சி தலைவராகவும்,  ஜி.கே.மணியின் மகனை  இளைஞர் அணி தலைவராகவும் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார் என்று மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள்  விருதாம்பிகை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,  'பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக தமிழ் குமரனை  அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும்,  தலைவர் அன்புமணியும் நியமனம் செய்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சி என்பது ராமதாஸ் குடும்பத்தின்  கம்பெனி கிடையாது. 25 வன்னியர் தியாகிகள் உயிர் நீத்த ரத்தத்தின் அடிப்படையில் உருவான கட்சியாகும். ஒவ்வொரு வன்னியர் மக்களுக்கும் இதைப் பற்றி கேள்வி கேட்க அனைத்து உரிமைகளும் உள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியை  நியமித்த போதே  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக வன்னியர் உரிமைப் போரில் உயிர் நீத்த 25 தியாகிகளின் குடும்பத்தில் ஒருவர் கூட இல்லையா என்று கேட்டேன்.  இன்றும் அதே  கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறேன்.  தியாகிகளின் குடும்பங்கள் இன்னும் குடிசை வீடுகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இத்தனை ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட அந்த தியாகிகளின் குடும்பத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பை கொடுக்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கூட தரவில்லை.  அன்புமணிக்குத்தான் அந்த  வாய்ப்பும் கொடுக்கப்பட்டது.

வன்னியர் உரிமைப் போரில் உயிர் நீத்தவர்களின்  குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் ஓய்வு ஊதியம் அளித்தது முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிதான். தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வன்னியர் தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டவும் இவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

ஆனால் ராமதாஸ்  ஒன்றுமே செய்தது கிடையாது.  தியாகிகளே வைத்து அரசியல் மட்டுமே செய்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக  அன்புமணியையும்,  இளைஞர் இளைஞர் அணித் தலைவராக தமிழ் குமரனை நியமிக்கவும் காரணம், வன்னியர் கல்வி அறக்கட்டளையில் உள்ள சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.  கட்சித் தலைவராக இருப்பவரும்,  இளைஞர் அணி தலைவராக இருப்பவரும் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பதால் தான் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ் குமரனைவிட இந்த கட்சிக்காக பாடுபட்ட செஞ்சி முன்னாள் எம்எல்ஏ கணேசன்குமார், கடலூர்  சண்.முத்துகிருஷ்ணன் போன்ற பல மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அவர்களை விட தமிழ் குமரன் பாட்டாளி மக்கள் கட்சிக்கு செய்திருப்பது  என்ன?  அவர்  தமிழ் இனத்தின் துரோகி. இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் கூட்டாளியான சுபாஸ்கரனின் லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக  உள்ளார். 

இலங்கை போர் உச்சம் அடைந்த நிலையில் இந்த சுபாஸ்கரன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்ட இங்குள்ளவர்கள்  அப்பொழுது எந்த ஒரு மிகப்பெரிய போராட்டத்தையும் செய்யவில்லை. இதற்காகவே தமிழ்குமரனுக்கு லைகா நிறுவனத்தில் பதவி  வழங்கப்பட்டது.  தமிழின காவலர் என்று மேடைதோறும் தன்னை கூறிக்கொள்ளும் டாக்டர் ராமதாஸ்,  நம் தொப்புள் கொடி உருவான இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் கூட்டாளியான சுபாஸ்கரன் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்குமரனை ஏன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும்? 

எனவே ராமதாஸ் உடனடியாக தமிழ்குமரனை  கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து விலக்கிவிட்டு 25 வன்னியர் தியாகிகள் குடும்பங்களில் ஒருவருக்கோ அல்லது கட்சிக்கு பாடுபட்ட மூத்த நிர்வாகிகளுக்கோ அந்த  பதவியை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in