யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!

குரு.விருத்தாம்பிகா
குரு.விருத்தாம்பிகா
Updated on
2 min read

பாமக சார்பில்  சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் சென்னையில் நாளை நடைபெற உள்ள நிலையில், யாரை ஏமாற்ற இந்த கூட்டம் நடத்துகிறீர்கள்? என்று டாக்டர் ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

'ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்களே!,  கடந்த  18 மாதங்களுக்கு முன்பு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை உச்சநீதிமன்றம்  ரத்து செய்தபிறகு,  தம்பி ஸ்டாலின் ஒரு மாதத்தில்  மீண்டும்  வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வருவார்,  போராட்டம் எதுவும் தேவையில்லை என்று நீங்கள்தான் சொன்னீர்கள்.

திமுக கூட்டணிக்கு செல்வதற்காக நீங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.  கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் திமுக அரசுக்கு நீங்கள் சட்டமன்றத்திலும் சரி, மற்ற இடங்களிலும் எதிர்க்கட்சி என்ற நிலையை மறந்து  ஜால்ரா அடித்துள்ளீர்கள். தற்போது நீங்கள் திமுக கூட்டணியில் இடம் பெற சாத்தியம் இல்லை என்பதால்  தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும்  வன்னிய மக்களை ஏமாற்ற முடிவு செய்து விட்டீர்கள்.

தேர்தல் வரும்பொழுது மட்டுமே உங்களுக்கு வன்னியர்களின் நலன் பற்றி பேச தெரியும். இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் வன்னியர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள் ஒதுக்கீடு கிடைக்காமல்‌ பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை என்பது தான் உங்கள் கவலை. 

முதலமைச்சருக்கு கடிதம் பலமுறை எழுதியுள்ளேன்.  சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி முதலமைச்சரை  சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளேன் என்று கூறி நீங்கள் மக்களை ஏமாற்றலாம். நானும் பலமுறை தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளேன் என்று நீங்கள்  சொல்லலாம். இதனால் பயன் என்ன?

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ்

உங்களுக்கு யாரும் கட்டளையிட வேண்டியது இல்லை.   நீங்கள் வன்னியர் மக்களுக்காகவே வாழ்கிறேன் என்று கூறுகிறீர்கள்.  அப்படி நீங்கள் வாழ்வது உண்மை என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்திற்காக பதவி விலக சொல்லுங்கள். நமக்கான உரிமை தானாக வந்து சேரும்.  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பென்னாகரம், தர்மபுரி, மேட்டூர், சேலம் மேற்கு, மயிலம் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  வந்தால்  வன்னியரின் உரிமை பற்றி பேசித்தானே ஆக வேண்டும்.

எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம்,  போராட்டம், அறிக்கை என்று மக்களை ஏமாற்றாமல் 40 ஆண்டுகளாக இந்த வஞ்சிக்கப்பட்ட வன்னியர் மக்களை  நீங்கள் ஏமாற்றியது போதும்.  உங்கள் வாழ்க்கையில் இறுதி காலத்திலாவது உங்கள் மகன் அன்புமணிக்காக  கட்சி நடத்தாமல் மக்களுக்காக கட்சி நடத்துங்கள்.  இதை நீங்கள் செய்யவில்லை என்றால் நீங்கள் செய்யும் அனைத்து செயலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி பேரம் நடத்த செய்யும்  நாடகம் மட்டுமே" என்று குரு‌ மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in