கடம்பூர் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது

கடம்பூர் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது

கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது ரத்து செய்யப்பட்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் நடந்தது. இதில் கடம்பூர் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது.

கடம்பூர் பேரூராட்சியில் கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே மூன்று சுயேச்சைகள் மட்டும் வென்றதாக அறிவிக்கப்பட்டு, மற்ற இடங்களுக்குத் தான் தேர்தல் நடந்தது. வென்ற சுயேச்சைகளில் கடம்பூர் யூனியன் சேர்மனும், அமமுக தென் மண்டல செயலாளருமான மாணிக்கராஜாவின் தம்பி நாகராஜா, தம்பி மனைவி ராஜேஷ்வரி ஆகியோரும் அடக்கம். இவர்கள் இப்போது திமுகவில் உள்ளனர்.

இந்த பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணிக்க ராஜாவின் தம்பி மனைவி ராஜேஷ்வரிக்கு பேரூராட்சி தலைவர் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனாலேயே மாணிக்கராஜா இம்முறை அமமுக வேட்பாளர்களை களத்தில் இறக்கவில்லை. அதிமுகவும் இந்த பேரூராட்சியில் வேட்பாளர்களைக் களம் இறக்கவில்லை.

இப்படியான சூழலில், கடம்பூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில், ஏற்கெனவே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட மூன்று வார்டுகள் தவிர்த்து மீதமுள்ள 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் இப்போது திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ், மதிமுக தலா 1 இடங்களிலும், சுயேட்சைகளாக வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களில் நான்கு பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் கடம்பூர் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in